#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் மீத போட்டிகளிலிருந்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்..?

By karthikeyan VFirst Published May 13, 2021, 8:26 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எஞ்சிய போட்டிகள் வரும் செப்டம்பரில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து, வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவரவர் நாட்டிற்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை செப்டம்பரில் நடத்தினால், இங்கிலாந்து வீரர்கள் அதில் ஆடமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் முடித்துவிட்டு, செப்டம்பர் - அக்டோபரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று ஆடவுள்ளது. எனவே அந்த சுற்றுப்பயணங்களுக்கு தங்கள் அணியின் அனைத்து வீரர்களுடன் முழு பலத்துடன் செல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி நிர்வாகம் உள்ளது. 

அதன்பின்னர் டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகியவையும் இருப்பதால் வீரர்களின் பணிச்சுமை மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் இருப்பதால், ஐபிஎல்லில் ஆட தங்கள் வீரர்களை அனுமதிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தயாராக இல்லை.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சொன்னதை போலவே, எங்கள் அணி தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளதால், எங்கள் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவது கடினம். அடுத்த சீசனிலிருந்து முழுமையாக ஆட ஆர்வமாக உள்ளேன் என்று ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டோக்ஸின் கருத்து, அவர் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆடும் முனைப்பில் இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. ஐபிஎல் 14வது சீசனில் பட்லர், பேர்ஸ்டோ, சாம் கரன், டேவிட் மலான், மொயின் அலி ஆகிய மிகச்சிறந்த இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்லில் ஆடிவந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!