ஐபிஎல்லை நாங்க நடத்துறோம்..! இங்கிலாந்து கவுண்டிகள் ஆர்வம்

By karthikeyan VFirst Published May 7, 2021, 3:39 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை நடத்த இங்கிலாந்தின் எம்சிசி, சர்ரே, வார்விக்‌ஷைர், லங்காஷைர் ஆகிய கவுண்டிகள் முன்வந்துள்ளன.
 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. இதையடுத்து ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் அவரவர் வீடுகளுக்கு திரும்பிவருகின்றனர். இங்கிலாந்து வீரர்கள் 8 பேர் இங்கிலாந்திற்கு சென்றுவிட்டனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை சேர்ந்த வீரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களும் விரைவில் கிளம்பிவிடுவார்கள்.

ஒரு சீசனில் மொத்தம் 60 போட்டிகள். 56 லீக் போட்டிகள். 3 பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி என மொத்தம் 60 போட்டிகள் நடக்கும். இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 31 போட்டிகளை வரும் செப்டம்பர் மாதம் நடத்தும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் ஒரு நாட்டில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை செப்டம்பர் மாத தொடக்கத்தில் முடிக்கும் இந்தியா, அதற்கடுத்த மாதமான அக்டோபரில் டி20 உலக கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அதற்கிடையில் ஐபிஎல்லை நடத்தி முடிக்கும் முனைப்பில் உள்ளது பிசிசிஐ.

இந்நிலையில், செப்டம்பர் பிற்பாதியில் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை நடத்த, இங்கிலாந்து கவுண்டிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. எம்சிசி(லார்ட்ஸ்), சர்ரே(லண்டன் ஓவல்), வார்விக்‌ஷைர்(எட்ஜ்பாஸ்டன் - பிர்மிங்காம்), லங்காஷைர்(மான்செஸ்டர்) ஆகிய கவுண்டிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. 
 

click me!