
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கெய்ல், ஹெட்மயர், பூரன், பொல்லார்டு, ரசல், பிராவோ என அதிரடி மன்னர்கள் பலர் இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு தலைகீழாக படுமோசமாக பேட்டிங் ஆடினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். தொடக்க வீரர் எவின் லூயிஸ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான சிம்மன்ஸ்(6), ஹெட்மயர்(9) ஆகிய இருவரையும் மொயின் அலி வீழ்த்தினார்.
யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லை 13 ரன்னில் மில்ஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் பிராவோ(5), நிகோலஸ் பூரன்(2), பொல்லார்டு(6), ஆண்ட்ரே ரசல்(0) ஆகிய அனைவரும் படுமோசமாக சொதப்பி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 14.2 ஓவரில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷீத் வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
56 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 11 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பேர்ஸ்டோ(9), மொயின் அலி(3) மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன்(1) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். ஆனாலும் இலக்கு மிக எளிதானது என்பதால், தொடக்க வீரர் பட்லர் ஒருமுனையில் நிலைத்து நின்று 9வது ஓவரில் போட்டியை முடித்து கொடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலக கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இங்கிலாந்து அணி. அதுமட்டுமல்லாது டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.