டி20 உலக கோப்பை வரலாற்றில் 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ்..! இங்கிலாந்து செம பவுலிங்

By karthikeyan VFirst Published Oct 23, 2021, 9:02 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், டி20 உலக கோப்பை வரலாற்றில் 3வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட்  இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கெய்ல், ஹெட்மயர், பூரன், பொல்லார்டு, ரசல், பிராவோ என அதிரடி மன்னர்கள் பலர் இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு தலைகீழாக படுமோசமாக பேட்டிங் ஆடினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். தொடக்க வீரர் எவின் லூயிஸ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான சிம்மன்ஸ்(6), ஹெட்மயர்(9) ஆகிய இருவரையும் மொயின் அலி வீழ்த்தினார்.

யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லை 13 ரன்னில் மில்ஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் பிராவோ(5), நிகோலஸ் பூரன்(2), பொல்லார்டு(6), ஆண்ட்ரே ரசல்(0) ஆகிய அனைவரும் படுமோசமாக சொதப்பி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 14.2 ஓவரில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷீத் வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த இந்த 55 ரன்கள் தான், டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணி அடித்த 3வது குறைந்தபட்ச ஸ்கோர். முதல் இரண்டு இடங்களிலும் நெதர்லாந்து அணி உள்ளது. நெதர்லாந்து அணி 39 ரன்கள் மற்றும் 44 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருக்கிறது. அதற்கடுத்த 3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.

56 ரன்கள் என்பது மிகமிக எளிதான இலக்கு. இதுவரை டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திராத இங்கிலாந்து அணிக்கு, இந்த போட்டியில் வெற்றி பெற்று அந்த மோசமான ரெக்கார்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
 

click me!