டஃப் கொடுத்த தென்னாப்பிரிக்கா.. கடைசியில் வெற்றிகரமாக முடித்துக்கொடுத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ்! ஆஸ்திரேலியா வெற்றி

By karthikeyan VFirst Published Oct 23, 2021, 7:13 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
 

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். ஆஸ்திரேலியா பவுலர்களான பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், ஆடம் ஸாம்பா ஆகிய அனைவருமே அருமையாக பந்துவீசி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள்  பவுமா(12) மற்றும் டி காக்(7) ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் வெளியேற, அவர்களை தொடர்ந்து வாண்டர் டசன்(2), ஹென்ரிச் கிளாசன்(13), டேவிட் மில்லர்(16) ஆகிய முக்கியமான மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மார்க்ரமும் 40 ரன் அடித்து 18வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 20 ஓவரில் வெறும் 118 ரன்கள் மட்டுமே அடித்தது தென்னாப்பிரிக்க அணி. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட், ஸ்டார்க் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

119 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் 14 ரன்னில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷும் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஸ்மித்தும் மேக்ஸ்வெல்லும் இணைந்து அணிக்கு தேவையான ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 42 ரன்களை சேர்த்தனர். ஸ்மித் 35 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து மேக்ஸ்வெல் 18 ரன்னிலும் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.

நோர்க்யா வீசிய 19வது ஓவரின் முதல் 4 பந்தில் 5 ரன்கள் மட்டுமே கிடைக்க, 5வது பந்தில் பவுண்டரி அடித்து அழுத்தத்தை குறைத்தார் ஸ்டோய்னிஸ். அந்த ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் 2வது பந்திலும், 4வது பந்திலும் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார் ஸ்டோய்னிஸ்.

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, டி20 உலக கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
 

click me!