நானே செய்தித்தாளில் படிச்சுதான் தெரிஞ்சுகிட்டேன்! டிராவிட் பயிற்சியாளராவது குறித்து அதிர்ச்சி தகவல் சொன்ன தாதா

By karthikeyan VFirst Published Oct 23, 2021, 6:17 PM IST
Highlights

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்படுவதாக வெளியான தகவலை, தானே செய்தித்தாளில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் அடுத்த பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஐபிஎல் 14வது சீசன் முடிவடைந்த தருவாயில், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவை துபாயில் சந்தித்து பேசினார் ராகுல் டிராவிட். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க, அந்த சந்திப்பின்போது சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்திய அணியின் பயிற்சியாளரானால், பெரும்பாலான நாட்கள் அணியுடனேயே இருக்க நேரிடும். அதனால் குடும்பத்துடன் இருக்கமுடியாது. தேசிய கிரிக்கெட் அகாடமி(என்சிஏ) பெங்களூருவில் இருப்பதால், வீட்டிலிருந்து என்சிஏவிற்கு வந்துவிட்டு போகலாம் என்பதால், என்சிஏவின் தலைவராக இருக்கவே விரும்பினார் ராகுல் டிராவிட். அதனால் தலைமை பயிற்சியாளராக தனக்கு இப்போதைக்கு விருப்பமில்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்தது. ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிப்பது உறுதியாகிவிட்டால், எதற்காக கண் துடைப்புக்கு விண்ணப்பங்கள் பெற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், அதற்கான பதிலை கங்குலியின் விளக்கம் கொடுத்துள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராவது குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் துபாயில் என்னை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, என்சிஏவின் செயல்பாடு, வளர்ச்சி ஆகியவை குறித்துத்தான் பேசினார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது என்சிஏ தான். எனவே அதன் வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம். 

ராகுல் டிராவிட்டிடம் பயிற்சியாளர் பதவி குறித்து பேசியிருக்கிறோம்; காத்திருக்க சொல்லியிருக்கிறார். அவருக்கு பயிற்சியாளராக விருப்பமிருந்தால் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர் ஏற்கனவே பயிற்சியாளராக விரும்பவில்லை. என்சிஏ-விலேயே நீடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக சம்மதித்துவிட்டதாகவும், அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் வெளியான தகவலை நானே செய்தித்தாள்களில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று கங்குலி தெரிவித்தார்.
 

click me!