அனுபவமற்ற இங்கிலாந்திடம் அடுத்தடுத்த தோல்விகள்..! தொடரை இழந்தது பரிதாப பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Jul 11, 2021, 3:05 PM IST
Highlights

அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 ஒருநாள் போட்டிகளில் தோற்று தொடரை இழந்தது பாகிஸ்தான் அணி.
 

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடந்துவருகிறது. இங்கிலாந்து அணியில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஒயின் மோர்கன் தலைமையிலான இந்திய அணி முற்றிலுமாக மாற்றப்பட்டு, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதுமுக மற்றும் அனுபவமற்ற வீரர்களை கொண்ட அணியுடன் ஆடிவருகிறது இங்கிலாந்து அணி.

அனுபவமற்ற அந்த இங்கிலாந்து அணியிடம் முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது. 2வது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால், 47 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மலான் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ஜாக் க்ராவ்லி ஆகிய இருவரும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். 

ஹசன் அலி டேவிட் மலானை டக் அவுட்டாக்க, ஷாஹீன் அஃப்ரிடி க்ராவ்லியை வீழ்த்தினார். 21 ரன்னுக்கு இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஃபில் சால்ட்டும் ஜேம்ஸ் வின்ஸும் இணைந்து அபாரமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்தனர்.

சால்ட், வின்ஸ் ஆகிய இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ஃபில் சால்ட் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ்(22) மற்றும் சிம்ப்சன்(17) ஆகிய இருவரையும் ஹசன் அலி வீழ்த்தினார். அதன்பின்னர் லெவிஸ் க்ரெகோரி மட்டும் நன்றாக ஆடி 40 ரன்கள் அடிதார். ஓவர்டன் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகிய இருவரையும் ஹசன் அலி வீழ்த்த, 46வது ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 248 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாகிப் மஹ்மூத் மட்டுமே பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம்(19), ஃபகர் ஜமான்(10), இமாம் உல் ஹக்(1), முகமது ரிஸ்வான்(5) ஆகிய முக்கியமான வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததன் விளைவாக, 41 ஓவரில் 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.

இதையடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. 2 ஒருநாள் போட்டிகளிலுமே அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் தோற்று தொடரை இழந்தது பாகிஸ்தான் அணி.
 

click me!