T20 WC: ஃபைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை

By karthikeyan V  |  First Published Nov 13, 2022, 5:15 PM IST

டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. 
 


டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்பர்னில் நடந்தது. பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் இரு அணிகளும் களமிறங்கின.

பாகிஸ்தான் அணி:

Tap to resize

Latest Videos

undefined

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.

IPL 2023:அவர் எங்க ஆளு; எங்களுக்கே கொடுத்துருங்க! குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை கேட்டு வாங்கிய கேகேஆர்

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத். 

முதலில் பேட்டிங்  ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை தொடக்கம் முதலே கட்டுப்பாட்டில் வைத்தனர் இங்கிலாந்து பவுலர்கள். தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை 15 ரன்களுக்கு சாம் கரன் வீழ்த்தினார். கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த முகமது ஹாரிஸை வெறும் 8 ரன்னுக்கு வெளியேற்றிய அடில் ரஷீத், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களுக்கு வீழ்த்தினார்.

இஃப்டிகார் அகமது ரன் அடிக்காமல் டக் அவுட்டானார். ஷான் மசூத் மட்டும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்தார். 28 பந்தில் 38 ரன்கள் அடித்த ஷான் மசூத்தை அதன்பின்னர் நீடிக்கவிடாமல் சாம் கரன் அவுட்டாக்கி அனுப்பினார். ஷதாப் கான் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை சாம் கரனும் கிறிஸ் ஜோர்டானும் இணைந்து அருமையாக வீசி, 4 ஓவரில் 20 ரன்களுக்கும் குறைவாக கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது.

138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸை ஒரு ரன்னுக்கு முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. அதன்பின்னர் ஃபிலிப் சால்ட்(10) மற்றும் ஜோஸ் பட்லரை (26) ஹாரிஸ் ராஃப் வீழ்த்தினார். அதன்பின்னர் ஹாரி ப்ரூக் 23 பந்தில் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

மிகப்பெரிய நாக் அவுட் போட்டிகளில் நிதானமாக நின்று சிறப்பாக ஆடி போட்டிகளை ஜெயித்து கொடுப்பதில் வல்லவரான பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் ஆடினார். பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது வாசிம் ஆகியோர் அதிவேகமாக பந்துவீசி மிரட்ட, அதற்கெல்லாம் அசராமல் நிதானம் காத்து ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றார் பென் ஸ்டோக்ஸ். இன்னிங்ஸின் 13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடித்தபோது ஷாஹீன் அஃப்ரிடி காயமடைந்தார். அதனால் அவர் வீசவேண்டிய 2 ஓவரை வீசமுடியாமல் போனது. அது இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது. அவர் வீச வேண்டிய ஓவரை இஃப்டிகார் வீச, அந்த ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்த பென் ஸ்டோக்ஸ், 49 பந்தில் 52 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகள் கழட்டிவிட்ட மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம்

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. ஏற்கனவே 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. வெஸ்ட் இண்டீஸுக்கு அடுத்து, 2 முறை டி20 உலக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
 

click me!