இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி.. அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த இங்கிலாந்து.. இந்திய அணிக்கு முதல் தோல்வி

By karthikeyan VFirst Published Jun 30, 2019, 11:22 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

ராயும் பேர்ஸ்டோவும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ராய் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் தொடர்ச்சியாக அடித்து ஆடிய பேர்ஸ்டோ சதமடித்தார். ஆனால் சதத்திற்கு பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 111 ரன்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழக்க, அதன்பின்னர் இயன் மோர்கன் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். ரூட் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வந்த பட்லரும் அதிரடியாக ஆடினார். ஆனால் பட்லர் 8 பந்துகளில் 20 ரன்கள் அடித்து அவுட்டானார்.

கடந்த 2 போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ், இந்த போட்டியிலும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 54 பந்துகளில் 79 ரன்களை குவித்தார். இதையடுத்து 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது.

338 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்தும் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் கடந்து அபாரமாக ஆடினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ரன்களை சேர்த்தனர். இந்த உலக கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்தாவது அரைசதத்தை அடித்த கோலி, இந்த முறையும் அதை சதமாக மாற்றமுடியாமல் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோலியை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பிளங்கெட். அதன்பின்னர் சதமடித்த ரோஹித், 102 ரன்களில் ஆட்டமிழந்தார். வழக்கமாக சதத்திற்கு பின்னர் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றக்கூடிய ரோஹித் இந்த முறை அதை செய்யவில்லை. 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் ஓரளவிற்கு அடித்து ஆடினர். ஆனால் ரிஷப் 32 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 45 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் போட்டி இந்தியாவிடமிருந்து பறிபோனது. அவர் ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் எஞ்சிய 5 ஓவர்களில் தோனியும் கேதரும் இணைந்து 39 ரன்கள் மட்டுமே அடித்ததால் 306 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி. இதையடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.  

click me!