இமாலய ஸ்கோரை நோக்கி இங்கிலாந்து.. இந்திய பவுலிங்கை இரக்கமே இல்லாமல் அடிச்சு நொறுக்கும் பேர்ஸ்டோ அபார சதம்

By karthikeyan VFirst Published Jun 30, 2019, 5:10 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ அபாரமாக ஆடி சதமடித்தார். 
 

உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ அபாரமாக ஆடி சதமடித்தார். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி பிர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் இந்திய அணியின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களான ஷமி மற்றும் பும்ராவின் பவுலிங்கை தொடக்கம் முதலே நிதானமாக எதிர்கொண்டு சிறப்பாக ஆடினர். இருவரின் பவுலிங்கையுமே ராயும் பேர்ஸ்டோவும் எதிர்கொள்ள திணறினர். ராய் தெளிவான சில ஷாட்டுகளை ஆட, பேர்ஸ்டோவிற்கு ஷமியின் பந்தில் இன்சைட் எட்ஜாகி 2 பவுண்டரிகள் கிடைத்தது. 

ஷமி மற்றும் பும்ராவின் வேகத்தை இருவராலும் திறம்பட எதிர்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட, சமாளித்து ஆடினர். இருவராலும் விக்கெட் எடுக்க முடியாததை அடுத்து வழக்கத்திற்கு மாறாக ஆறாவது ஓவரிலேயே சாஹலை கொண்டுவந்தார் கேப்டன் கோலி. ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. சாஹலின் பவுலிங்கை ராயும் பேர்ஸ்டோவும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். 

அபாரமாக ஆடிய இருவருமே அரைசதம் கடக்க, 16வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டிவிட்டது. அதன்பின்னரும் இருவரும் அடித்து ஆடினர். ஆனால் ராய் 67 ரன்களில் குல்தீப்பின் பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ சதமடித்தார். 

தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் களத்தில் நிலைத்த பிறகு தாறுமாறாக அடித்து ஆடிய பேர்ஸ்டோ, நல்ல பவுலிங் யூனிட்டை கொண்ட இந்திய அணிக்கு எதிராக சதமடித்தார். பேர்ஸ்டோவுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்துஅ ஆடிவருகிறார். 

29வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி 200 ரன்களை எட்டிவிட்டது. இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில், இந்திய பவுலிங்கை இரக்கமே இல்லாமல் அடித்து ஆடிவரும் பேர்ஸ்டோவும் களத்தில் இருப்பதால் இங்கிலாந்து அணி இமாலய ஸ்கோரை அடிப்பது உறுதியாகிவிட்டது. 
 

click me!