#ENGvsIND இங்கிலாந்தை பொட்டளம் கட்டிய பும்ரா..! எளிய இலக்கை விரட்டும் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

By karthikeyan VFirst Published Aug 7, 2021, 10:29 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 209 ரன்கள் மட்டுமே தேவை.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் அடித்தது.

95 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை 18 ரன்களுக்கு வீழ்த்தினார் முகமது சிராஜ். அவர் அவுட்டானதற்கு அடுத்த ஓவரிலேயே ஜாக் க்ராவ்லியை வெறும் 6 ரன்னுக்கு வெளியேற்றிய பும்ரா, தொடக்க வீரர் சிப்ளியை 28 ரன்னில் வீழ்த்தி, அவருக்கும் ரூட்டுக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். 

அதன்பின்னர் ஜானி பேர்ஸ்டோ(30), டேனியல் லாரன்ஸ்(25), ஜோஸ் பட்லர்(17) ஆகியோர் ஒருமுனையில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து கொண்டேயிருந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடி சதமடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். 

மிகச்சிறப்பாக ஆடி களத்தில் செட்டில் ஆகி சதமும் அடித்து, இந்திய அணியை அச்சுறுத்திய ரூட்டை 109 ரன்களுக்கு வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய பும்ரா, அதன்பின்னர் அதிரடியாக ஆடிய சாம் கரன்(32) மற்றும் ஸ்டூவர்ட் பிராட்(0) ஆகிய இருவரையும் வீழ்த்தி, இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி விக்கெட்டாக ராபின்சனை விக்கெட்டை ஷமி வீழ்த்த, 303 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இந்திய அணியை விட மொத்தமாக 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 209 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் இன்னும் 24 ரன்களும், கடைசி நாளான நாளைய ஆட்டமும் எஞ்சியிருப்பதால், இந்த இலக்கை அடிப்பது இந்திய அணிக்கு எளிதான காரியம். கடைசி இன்னிங்ஸ் என்பதால் அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை எதிர்கொள்வது சவாலான காரியம் என்றாலும், வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணிக்கு இலக்கு எளிதானதே.
 

click me!