ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள ட்வைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கிறது. அடுத்த சீசனுக்கான ஏலம் வரும் 23ம் தேதி கொச்சியில் நடக்கிறது. அந்த ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்தன. அந்தவகையில் சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னரும், அந்த அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவருமாக திகழ்ந்த ட்வைன் பிராவோவை விடுவித்தது. கடந்த சீசனுக்கான ஏலத்தில் ரூ.4.4 கோடி கொடுத்து பிராவோவை வாங்கிய சிஎஸ்கே அணி, அதைவிட குறைவான தொகைக்கு அவரை ஏலத்தில் எடுப்பதற்காக விடுவித்ததாக கருதப்பட்டது.
ஆனால் சிஎஸ்கே அணி வேறு ஐடியா வைத்திருந்திருக்கிறது. ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பிராவோ பெயர் இல்லை. இந்நிலையில், ட்வைன் பிராவோ ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். அவர் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
PAK vs ENG: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் அதிக ரன்களை குவித்து இங்கிலாந்து வரலாற்று சாதனை
ஐபிஎல்லில் 161 போட்டிகளில் ஆடியுள்ள ட்வைன் பிராவோ, சிஎஸ்கே அணிக்காக 116 போட்டிகளில் ஆடியுள்ளார். 2011ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டுவரை சிஎஸ்கே அணிக்காக ஆடினார் பிராவோ. 2016 மற்றும் 2017 ஆகிய 2 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த 2 சீசன்களை தவிர மற்ற 9 சீசன்களிலும் பிராவோ சிஎஸ்கேவிற்காக ஆடினார். 2011, 2018, 2021 ஆகிய 3 முறை சிஎஸ்கே அணி கோப்பையை வென்றபோது, அதில் முக்கிய பங்காற்றியவர் பிராவோ. இதுவரை ஒரு வீரராக சிஎஸ்கே அணிக்கு பங்களிப்பு செய்துவந்த பிராவோ, இனிமேல் பவுலிங் பயிற்சியாளராக பங்களிப்பு செய்யவுள்ளார்.