
மொஹாலி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி:
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மொஹாலியில் நடந்தது. அந்த மொஹாலி டெஸ்ட்டில் இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை(மார்ச் 12) தொடங்குகிறது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. பகலிரவு போட்டி என்பதால் இந்த போட்டிக்கு பிங்க் பந்து பயன்படுத்தப்படும்.
துஷ்மந்தா சமீரா விலகல்:
இந்த போட்டியிலிருந்து இலங்கை வீரர்கள் இருவர் விலகியுள்ளனர். இலங்கை அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலரான துஷ்மந்தா சமீரா முதல் போட்டியில் ஆடாத நிலையில், அவரது பணிச்சுமையை கருத்தில்கொண்டு 2வது டெஸ்ட்டிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பை வரை, வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே துஷ்மந்தா சமீரா ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் சமீராவை லக்னோ அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. எனவே ஐபிஎல்லிலும் ஆடவுள்ளதால், அவர் 2வது டெஸ்ட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பதும் நிசாங்கா ஆடுவது சந்தேகம்:
அதேபோல, முதல் டெஸ்ட்டில் இலங்கை அணிக்கு ஒரே பாசிட்டிவ் விஷயமாக அமைந்த இலங்கை பேட்ஸ்மேன் பதும் நிசாங்கா முதுகுவலியால் அவதிப்படுவதால் அவரும் 2வது டெஸ்ட்டில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவரும் ஆடவில்லை என்றால், அது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.