நங்கூரம் போட்ட சிப்ளி, ஸ்டோக்ஸ் அரைசதம்..! வெஸ்ட் இண்டீஸ் சீக்கிரம் இதை செய்தே தீரணும்.. இல்லைனா ஆப்புதான்

By karthikeyan VFirst Published Jul 17, 2020, 2:39 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்ஸும் தொடக்க வீரர் டோமினிக் சிப்ளியும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். 
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

வெற்றி கட்டாயத்துடன் இந்த போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸும் டோமினிக் சிப்ளியும் களமிறங்கினர். பர்ன்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஸ்டான் சேஸின் பந்தில் பர்ன்ஸ் ஆட்டமிழக்க, அதற்கடுத்த பந்திலேயே ஜாக் கிராவ்லியும் ஆட்டமிழந்தார். களத்திற்கு வந்த முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார் கிராவ்லி.

அதன்பின்னர் சிப்ளியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். 8 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடி, நல்ல தொடக்கத்தை பெற்றார் ரூட். ஆனால் அவரை பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் 23 ரன்களில் வீழ்த்தினார் அல்ஸாரி ஜோசஃப். அல்ஸாரியின் பந்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரூட்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் சிப்ளி நிலைத்து நின்று ஆடினார். அவருடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த சிப்ளி, அதன்பின்னரும் சிறப்பாக ஆடி சதத்தை நோக்கி பயணிக்க, பென் ஸ்டோக்ஸும் அரைசதம் கடந்தார்.

மழையால் நேற்று ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால், 82 ஓவர்கள் வீசப்பட்டன. முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்துள்ளது. சிப்ளி 86 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து இதுவரை 126 ரன்களை சேர்த்துள்ளனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தை சிப்ளியும் ஸ்டோக்ஸும் தொடர்வார்கள். நேற்று இவர்கள் இருவரும் இணைந்து முழுமையாக 50 ஓவர்கள் பேட்டிங் ஆடியுள்ளனர். இந்த ஜோடியை வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலர்களால் நேற்று பிரிக்க முடியவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் - சிப்ளி நங்கூரம் போட்டு ஆடினர். ஆனால் இன்று ஃப்ரெஷ்ஷாக தொடங்கும் இரண்டாவது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பிரத்யேகமான திட்டங்களுடன் வரும். இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் முயலும். இந்த ஜோடியை விரைவில் பிரித்தே தீர வேண்டிய அவசியம் வெஸ்ட் இண்டீஸுக்கு உள்ளது. இல்லையெனில் இங்கிலாந்து மெகா ஸ்கோர் அடித்துவிடும்.
 

click me!