சச்சின் சொல்ற மாதிரிலாம் செய்ய முடியாது.. சச்சினுடன் முரண்படும் முன்னாள் தொடக்க வீரர் டெக்னிக்கல் விளக்கம்

By karthikeyan VFirst Published Jul 16, 2020, 6:09 PM IST
Highlights

கிரிக்கெட்டில் டி.ஆர்.எஸ் விதியில், அம்பயர் கால் என்ற முறைக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் குரல் கொடுத்திருந்த நிலையில், சச்சின் டெண்டுல்கருடன் முரண்பட்டுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
 

கிரிக்கெட்டில் அம்பயர்களின் பணி மிக முக்கியமானது மட்டுமல்லாது கடினமானதும் கூட. ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் அம்பயர் கொடுக்கும் ஒரு தவறான தீர்ப்பால், போட்டியின் முடிவே பலமுறை மாறியிருக்கின்றன. 

குறிப்பாக எல்பிடபிள்யூ விஷயத்தில்தான், அம்பயர்களின் கணிப்பும் முடிவும் சில நேரங்களில் தவறாக அமைந்துவிடும். மனித தவறு நடப்பது வழக்கம்தான். அதனால் அம்பயர்களை குறை சொல்ல முடியாது என்றாலும், தவறான முடிவுகள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. 

அதனால் தான் தொழில்நுட்ப உதவியுடன், தவறுகளை கலையும் நோக்கில், கள நடுவரின் முடிவை ரிவியூ செய்யும் விதமாக டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. டி.ஆர்.எஸ் முறையே, தவறுகளை கலைந்து சரியான தீர்ப்பை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான். ஆனால் அதில் உள்ள ”அம்பயர் கால்” என்ற ஓட்டை, மீண்டும் அநீதியளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. 

பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டு, அதற்கு களநடுவர் அவுட் கொடுக்கவில்லையென்றால், பவுலிங் அணி டி.ஆர்.எஸ் எடுக்கும். அந்த பந்தின் பாதி பகுதிக்கு மேல் ஸ்டம்ப்பில் பட்டால்தான் தேர்டு அம்பயர் அவுட் கொடுப்பார். பந்தின் சிறு பகுதி மட்டுமே ஸ்டம்ப்பில் பட்டால், அம்பயர் கால் என்று கள நடுவரின் முடிவிற்கே விடப்படும். 

எல்பிடபிள்யூ விவகாரங்களில் பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்று கொடுக்க வேண்டும். பவுலர் ஸ்டம்புக்கு நேராக வீசிய பந்து பேட்ஸ்மேனின் கால்காப்பில் பட்டாலே அவுட் கொடுத்துவிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். 

எல்பிடபிள்யூ-வை பொறுத்தமட்டில் கள நடுவர்கள் எப்போதுமே 100% துல்லியமாக செயல்பட முடியாது என்பதால் தான் ரிவியூவே. ஆனால் ரிவியூவில் பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டால், அம்பயர் கால் என்ற வகையில் கள நடுவரின் முடிவுக்கே விடப்படுகிறது. அப்படி செய்வதால், களநடுவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளை பொறுத்து வீரர்கள் வெளியேற வேண்டியோ அல்லது பவுலர்கள் வருத்தப்பட வேண்டியோ உள்ளது. 

எடுத்துக்காட்டுக்கு பார்த்தோமேயானால், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியில் விராட் கோலிக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. அதை கோலி ரிவியூ செய்தார். பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டதால், அம்பயர் கால் என்பதால் கள நடுவரின் முடிவுப்படி கோலி வெளியேறினார். இறுதி போட்டியில் ஜேசன் ராய்க்கு கள நடுவர் அவுட் கொடுக்காததால் நியூசிலாந்து அணி ரிவியூ செய்தது. பந்தின் பாதி பகுதி ஸ்டம்பில் பட்டதால் அம்பயர் கால் என்பதால் கள நடுவர் அவுட் கொடுக்காததால் ராய் தப்பினார். 

ஒரே மாதிரியான பந்துதான். ஆனால் கோலி அவுட், ராய் தப்பிவிட்டார். இது என்ன நியாயம்..? அம்பயர் கால் என்பதால் ரிவியூ அந்த குறிப்பிட்ட அணிக்கு திரும்ப கொடுக்கப்பட்டாலும் ரிவியூவை மட்டுமே வைத்துக்கொண்டு என்ன செய்வது..? பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் என்று விதியை மாற்ற வேண்டும். பாதி பந்து, முழு பந்து என்ற பேதங்கள் எல்லாம் இருக்கக்கூடாது. அம்பயர்களால் துல்லியமாக செயல்பட முடியாது என்பதால்தான், தவறான முடிவுகளால் எந்த அணியும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஐசிசியின் சில விதிகள், பல நேரங்களில் அணிகளுக்கு பாதிப்பாகவே அமைகிறது. 

இந்நிலையில், அம்பயர் கால் என்ற முறைக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அண்மையில் குரல் கொடுத்திருந்தார். பிரயன் லாராவுடனான உரையாடலில், அம்பயர் கால் முறை சரியானது அல்ல. பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட் கொடுக்க வேண்டும். பந்தின் எத்தனை சதவிகித பகுதி ஸ்டம்பில் பட்டது என்பதையெல்லாம் பார்க்கக்கூடாது. ஸ்டம்பில் பந்து பட்டால் அவுட்; இல்லையென்றால் நாட் அவுட் என்று டென்னிஸை போல முடிவு திடமாக இருக்க வேண்டும் என்று சச்சின் பேசியிருந்தார்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் சொல்வது போல செய்ய முடியாது என்று, சச்சினின் கருத்துடன் முரண்பட்டுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. அதில் உள்ள டெக்னிக்கல் சிக்கல்களை விளக்கமாக எடுத்துக்கூறி, தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, சச்சின் சொல்வது சரிதான். ஆனால் அப்படி செய்ய முடியாது. அதுமட்டுமல்லாது, டி.ஆர்.எஸ் முறையை கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்ட்டன் ஆகிய விளையாட்டுகளுடன் ஒப்பிடவும் முடியாது. அந்த விளையாட்டுகளில் முடிவுகளை நேருக்கு நேர் கண்ணால் தெளிவாக காணமுடியும். ஆனால் கிரிக்கெட்டில் பந்து செல்லும் திசை, லெந்த், பவுன்ஸ் ஆகியவற்றை தொழில்நுட்பத்தின் உதவியுடன் கணிப்பதால், அதைவைத்து திடமான முடிவெடுக்க முடியாது. அதனால் அதிகபட்ச வாய்ப்பின் பலனை சாதகமாக்கும் வகையில், முடிவெடுக்கப்படுகிறது. பந்தின் ஒரு சிறு பகுதி ஸ்டம்பில் படுவதாக டெக்னாலஜி மூலம் கண்டறியப்பட்டால் கூட அதற்கு அவுட் கொடுக்க வேண்டும் என்று சச்சின் சொல்கிறார். ஆனால் அப்படி செய்யமுடியாது என்பது என் கருத்து.

கிரிக்கெட்டில் பந்தை டிராக் செய்ய பயன்படுத்தும் டெக்னாலஜியை கண்டறிந்த நிறுவனமே, 50-50 தான் துல்லியமான முடிவு என்கிறது. 50%-க்கும் குறைவான பகுதி ஸ்டம்பில் படுவதை வைத்து 100% திடமான முடிவெடுக்க முடியாது. அதனால் தான் பந்தின் பெரும்பான்மை பகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கப்படுகிறது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டெக்னாலஜியை முழுவதுமாக நம்பமுடியாது என்றால், பின்னர் அதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியதுதான் சரியானது.
 

click me!