நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் முக்கியமான வீரர் என்பதை மணிமாறன் சித்தார்த் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஏலத்தில் மணிமாறன் சித்தார்த்தை ஏலம் எடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியாக லக்னோ அணியானது, மணிமாறன் சித்தார்த்தை ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.
கடந்த மாதம் 30 ஆம் தேதி லக்னோவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் அவர் முதல் ஓவரை வீசி சாதனை படைத்தார். எனினும் அந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்த அவர், 3ஆவது ஓவரில் மட்டும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 16 ரன்கள் கொடுத்தார். இந்தப் போட்டியில் 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் பெங்களூருவில் நடந்த 15ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் மணிமாறன் சித்தார்த் தனது முதல் ஓவரிலேயே விராட் கோலியின் விக்கெட்டை எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
விராட் கோலியின் 100ஆவது டி20 போட்டி இது. இந்த போட்டியில் அவரது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய மணிமாறன் சித்தார்த் 21 ரன்கள் கொடுத்தார். ஆனால், இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் மற்றும் 2021 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அப்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உள்ளூர் போட்டிகளி தமிழ்நாடு அணிக்காக விளையாடியுள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையில் லக்னோ அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். சையது முஷ்டாக் அலி டிராபி மற்றும் ரஞ்சி டிராபி தொடரிலும் இடம் பெற்று விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.