ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணமாக இருந்த லக்னோவின் பவுலர்களில் மாயங்க் யாதவ்வும் ஒருவர்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 15 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 3 போட்டிகளில் அவே அணி வெற்றி பெற்றுள்ளது. 12 போட்டிகளில் ஹோம் மைதான அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 30 ஆம் தேதி லக்னோவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலமாக இந்திய வீரர் மாயங்க் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய மாயங்க் யாதவ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதே போன்று நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மாயங்க் யாதவ் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதன் மூலமாக விளையாடிய 2 போட்டிகளிலும் மாயங்க் யாதவ் 8 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு லக்னோ அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் தான் இந்த ஆண்டு அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 2 போட்டிகளில் தலா 3, 3 என்று 6 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசியுள்ளார். இந்த சீசனில் அதிக வேகத்தில் பந்து வீசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 155.8 கிமீ வேகத்தில் பந்து வீசியிருக்கிறார்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார். அவர் 10 டி20 மற்றும் 17 லிஸ்ட் ஏ போட்டிகள் உள்பட அனைத்து பார்மேட்டுகளிலும் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த தியோதர் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணிக்காக விளையாடி 5 இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் எடுத்த மாயங்க் யாதவ்விற்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறப்பாக பந்து வீசிய மாயங்க் யாதவ்விற்கு சூர்யகுமார் யாதவ், யுஸ்வேந்திர சஹால், டேல் ஸ்டெயின், ஆகாஷ் சோப்ரா, ஹர்ஷா போக்லே என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.