டெல்லியை வீழ்த்தியது எப்படி..? தோனி பகிரும் வெற்றி ரகசியம்

By karthikeyan VFirst Published May 11, 2019, 3:13 PM IST
Highlights

சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளை சிஎஸ்கே ஸ்பின்னர்கள் வீழ்த்தினர். முன்ரோ, ஷ்ரேயாஸ், ரூதர்ஃபோர்டு, அக்ஸர் படேல் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், மறுமுனையில் நின்ற ரிஷப் பண்ட்டால் துணிச்சலாக அடித்து ஆடமுடியவில்லை.

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடினர். அவர்களது விக்கெட்டுக்கு பிறகு ஆட்டம் மந்தமானது. சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளை சிஎஸ்கே ஸ்பின்னர்கள் வீழ்த்தினர். முன்ரோ, ஷ்ரேயாஸ், ரூதர்ஃபோர்டு, அக்ஸர் படேல் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், மறுமுனையில் நின்ற ரிஷப் பண்ட்டால் துணிச்சலாக அடித்து ஆடமுடியவில்லை. கடைசி ஓவரில் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் சிக்ஸர் விளாச 147 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது டெல்லி அணி. 

148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கேவிற்கு தொடக்க வீரர்கள் வாட்சனும் டுபிளெசிஸும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதனால் சிஎஸ்கேவின் வெற்றி எளிதானது. 19வது ஓவரில் இலக்கை எட்டி சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, 140 பிளஸ் ரன்களை நாங்கள் சேஸ் செய்த விதம் அருமையானது. ஆடுகளம் ஸ்பின்னிற்கு நன்கு ஒத்துழைத்தது. எங்கள் பவுலிங் அபாரமாக இருந்தது. டெல்லி அணியை அதிக ரன்கள் குவிக்க அனுமதிக்கவில்லை. டெல்லி அணியின் பேட்டிங் வரிசை வலிமையானது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்களை விரைவில் வீழ்த்துவது அவசியம். மைதானம் சிறியது; எனவே தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர் எங்கள் பவுலர்கள். 

எந்த நேரத்தில் எந்த பவுலரிடம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் கேப்டனின் பணி. ஆனால் பந்தை கையில் பெற்றதும் அபாரமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தார்கள் எங்கள் ஸ்பின்னர்கள். டெல்லி அணியின் விக்கெட்டுகள் முக்கியமான நேரத்தில் விழுந்தன. விக்கெட்டுகள் சீராக விழுந்துகொண்டேயிருந்தால் களத்திற்கு வரும் புதிய பேட்ஸ்மேன் ஆடுவது கடினம். அதுதான் நடந்தது என்று தோனி தெரிவித்தார். 
 

click me!