அதெல்லாம் பெரிய முட்டாள்தனம்.. எப்போ வேணா எது வேணாலும் நடக்கலாம்!! உலக கோப்பை வெற்றி அணியில் இருந்த வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published May 11, 2019, 1:27 PM IST
Highlights

உலக கோப்பையே நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை பல முன்னாள் ஜாம்பவான்கள் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாகவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக பார்க்கப்பட்ட ராயுடு, அண்மைக்காலமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். 

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். இந்திய அணியில் நான்காம் வரிசை சிக்கல் நீண்டகாலமாக இருந்துவருகிறது. யுவராஜ் சிங்கிற்கு அடுத்த அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 

பல சோதனை முயற்சிகளுக்கு பிறகு ராயுடு உறுதி செய்யப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அருமையாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். 

விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரோடேட் செய்வதுடன் அவ்வப்போது பெரிய ஷாட்டுகளை அடித்தும் ஆடுகிறார். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் அவரை இறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் நான்காம் வரிசையை இந்த வீரருக்கு என்று உறுதி செய்யாமல், சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவதற்கான திட்டத்தையும் இந்திய அணி வைத்துள்ளது. 

உலக கோப்பையே நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை பல முன்னாள் ஜாம்பவான்கள் தெரிவித்துக்கொண்டுதான் உள்ளார்கள். எந்த பேட்டிங் வரிசையையும் இந்த வீரருக்குத்தான் என்று ஒதுக்காமல் சூழலுக்கு ஏற்ற வகையில் வீரர்களை களமிறக்க வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தார். 

இந்நிலையில், கபில் தேவின் கருத்தைத்தான் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளரும் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சந்தீப் பாட்டீல் பிரதிபலித்துள்ளார். நான்காம் வரிசை குறித்து பேசிய சந்தீப் பாட்டீல், நான்காம் வரிசைக்கு நிரந்தரமான ஒரு வீரரை உறுதி செய்வது குறித்த விவாதங்களே முட்டாள்தனமானது. பேட்டிங் ஆர்டர்கள் தேவைக்கேற்றவாறு இருக்க வேண்டும், இறக்கப்பட வேண்டும். ஓபனிங்கோ அல்லது கடைசி இடமோ பேட்டிங் ஆர்டரில் அனைத்து வரிசையுமே முக்கியமானதுதான். 

சூழலுக்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் நான்காம் வரிசையில் இறங்கலாம். ஆனால் தோனி அந்த இடத்திற்கு மிகச்சரியாக இருப்பார். நான் சேர்மனாக இருந்தபோது தோனிதான் என்னுடைய நிரந்தர 4ம் வரிசை வீரருக்கான சாய்ஸ். அவர் 5 அல்லது ஆறாம் வரிசையில் இறங்குகிறேன் என்றபோதெல்லாம் நான் அவரை நான்காம் வரிசையில் இறங்க அறிவுறுத்தினேன். உலக கோப்பையில் விராட் கோலி கூட நான்காம் வரிசையில் இறங்கலாம். எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். 

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது அந்த அணியில் ஆடியவர் சந்தீப் பாட்டீல். இந்நிலையில், நான்காம் வரிசை பேட்டிங் விஷயத்தில் தனது கேப்டனின் கருத்தை தானும் பிரதிபலித்துள்ளார். 
 

click me!