20 வருஷமா எனக்கு அவர தெரியும்.. ரொம்ப நல்ல மனுஷன்!! காம்பீருக்கு ஆதரவா களத்தில் குதித்த முன்னாள் வீரர்

Published : May 11, 2019, 12:33 PM IST
20 வருஷமா எனக்கு அவர தெரியும்.. ரொம்ப நல்ல மனுஷன்!! காம்பீருக்கு ஆதரவா களத்தில் குதித்த முன்னாள் வீரர்

சுருக்கம்

காம்பீர் தன்னை கொச்சையாக விமர்சித்து துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்ததாக, டெல்லி கிழக்கு தொகுதியில் காம்பீரை(பாஜக வேட்பாளர்) எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி பெண் வேட்பாளரான அதிஷி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து காம்பீருக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங் குரல் கொடுத்த நிலையில், மற்றொரு முன்னாள் வீரரும் காம்பீருக்காக வரிந்துகட்டியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர், இந்திய அணிக்கு சிறப்பான பங்காற்றியவர். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய இரண்டு கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் காம்பீர். 

கிரிக்கெட் களத்திற்கு மட்டுமல்லாமல் பொதுவாழ்விலும் மிகவும் நேர்மையானவர் காம்பீர். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுபவர் மட்டுமல்லாது எப்போதுமே நியாயத்தின் பக்கம் இருப்பவர். அவர் அதிரடியாக சில கருத்துகளை வெளிப்படையாக பேசுவதாலேயே சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். ஆனால் அவரது அர்ப்பணிப்பையும் நேர்மையையும் சந்தேகப்படவே முடியாது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற காம்பீர், பாஜகவில் இணைந்து, நடந்துவரும் மக்களவை தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். 12ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே காம்பீரை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி காம்பீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

மக்களிடம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கொச்சையாக விமர்சித்து பல லட்சம் துண்டு பிரசுரங்களை காம்பீர் விநியோகித்ததாக குற்றம்சாட்டினார். நான் ஒரு பாலியல் தொழிலாளி, நான் மாட்டுக்கறி உண்பேன் என்றெல்லாம் காம்பீர் தன்னை விமர்சித்ததாக அதிஷி குற்றம்சாட்டினார். 

மேலும் காம்பீர் இதுபோன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு பெண் என்று கூட பாராமல் அவர் என்னை விமர்சித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளார். இந்த மனநிலை உள்ளவர்கள் பதவிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும் என்று அதிஷி கேள்வி எழுப்பினார். 

காம்பீர் மீது அதிஷி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து காம்பீருக்கு ஆதரவாக அவரது சக வீரர் ஹர்பஜன் சிங் குரல் கொடுத்தார். இதுகுறித்து டுவீட் செய்திருந்த ஹர்பஜன் சிங், காம்பீர் மீதான குற்றச்சாட்டுகளை கண்டு அதிர்ந்துபோனேன். எனக்கு காம்பீரை நன்கு தெரியும். அவர் எந்த சூழலிலும் பெண்கள் குறித்து இழிவாகவோ கொச்சையாகவோ பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. தேர்தலில் வெல்வதும் தோற்பதும் இரண்டாவது விஷயம். அதற்கெல்லாம் அப்பாற்பட்ட நல்லவர் காம்பீர் என்று ஹர்பஜன் சிங் ஆதரவுக்குரல் கொடுத்தார். 

ஹர்பஜன் சிங்கை போலவே விவிஎஸ் லட்சுமணனும் காம்பீருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள லட்சுமணன், காம்பீர் பற்றி வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன். காம்பீரை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். மிகச்சிறந்த கேரக்டர் காம்பீர். நேர்மையாளரான காம்பீர், பெண்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும் என்று காம்பீருக்கு ஆதரவாக லட்சுமணன் குரல் கொடுத்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?