தப்பு பண்ணிட்டீங்களே தல.. அவரோட கேட்ச்சை போயி விட்டுட்டீங்களே!!

By karthikeyan VFirst Published Jul 9, 2019, 5:42 PM IST
Highlights

கேப்டன் வில்லியம்சனும் நிகோல்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அவர்கள் பார்ட்னர்ஷிப்பை நிலைக்கவிடாத ஜடேஜா, நிகோல்ஸை கிளீன் போல்டாக்கி அனுப்பினார். நிகோல்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. மான்செஸ்டரில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில்  பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் கப்டில் மற்றும் நிகோல்ஸ் ஆகிய இருவரும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். முதல் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. மூன்றாவது ஓவரில்தான் முதல் ரன்னே எடுக்கப்பட்டது. நான்காவது ஓவரில் கப்டிலின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனும் நிகோல்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் அவர்கள் பார்ட்னர்ஷிப்பை நிலைக்கவிடாத ஜடேஜா, நிகோல்ஸை கிளீன் போல்டாக்கி அனுப்பினார். நிகோல்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வில்லியம்சனுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

அனுபவ வீரர்களான வில்லியம்சனும் டெய்லரும் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்திவருகின்றனர். 4வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட வில்லியம்சன், பொறுப்புடன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். வில்லியம்சன் - டெய்லர் பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த நிலையில், இந்த ஜோடியை பிரிப்பதற்காக 32வது ஓவரில் பும்ராவை வீசவைத்தார் கேப்டன் கோலி. 

தன்னை நம்பி கேப்டன் பந்தை கொடுத்த போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி பிரேக் கொடுக்கும் பும்ரா, இந்த முறையும் அதை செய்தார். 32வது ஓவரின் மூன்றாவது பந்து, டெய்லரின் பேட்டின் வெளிவிளிம்பில் பட்டு தோனியிடம் சென்றது. அந்த பந்து முழுமையாக கேரி ஆகவில்லை என்றாலும் தோனி அதை பிடித்திருக்கலாம். ஆனால் பிடிக்க வேண்டிய கேட்ச்சை தோனி விட்டார். 

இதையடுத்து பும்ராவால் கிடைக்கவேண்டிய பிரேக் கிடைக்காமல் போனது. டெய்லர் ஒரு சிறந்த அனுபவ வீரர். அவர் நிலைத்துவிட்டால் அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்திவிடுவார். மேலும் அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. முக்கியமான கட்டத்தில் அந்த கேட்ச்சை தோனி விட்டார். அதன் விளைவு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த பார்ட்னர்ஷிப்பை டெய்லரை வீழ்த்தி பிரிக்க முடியவில்லை என்றாலும் வில்லியம்சனை 67 ரன்களில் வீழ்த்தினார் சாஹல்.


 

click me!