டி20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மோசமான ஃபீல்டிங் காரணமாக தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது நியூசிலாந்து அணி. குறிப்பாக முதல் ஓவரிலேயே பாபர் அசாமின் கேட்ச்சை டெவான் கான்வே கோட்டைவிட்டதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.
டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது அரையிறுதி போட்டி நாளை(நவம்பர் 10) அடிலெய்டில் நடக்கிறது.
இன்று சிட்னியில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
undefined
இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணி, ஒரு அணியாக சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து அரையிறுதிக்கு முன்னேறியது. எதிரணிகள் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு வந்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஐசிசி தொடர்களில், அதுவும் நாக் அவுட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை வெற்றிக்காக போராடும்.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அது எதுவுமே நடக்கவில்லை. நியூசிலாந்து அணி அதன் தரத்திற்கேற்ப ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறிய அதேவேளையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் அரையிறுதிக்கு முன்னேறியது.
நல்வாய்ப்பாக அரையிறுதிக்கு முன்னேறியதை நன்கறிந்த பாகிஸ்தான் அணி, சூப்பர் 12 சுற்றில் செய்த தவறுகளைசெய்யாமல், அரையிறுதிக்கு முன்னேற கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிடக்கூடாது என்ற உறுதியில் வழக்கத்திற்கு மாறாக மிகச்சிறப்பாக ஃபீல்டிங் செய்தது. ஆனால் அதேபோல வழக்கத்திற்கு மாறாக, நியூசிலாந்து அணி மோசமாக ஃபீல்டிங் செய்தது.
153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான பாபர் அசாம் ஃபார்மிலேயே இல்லாத நிலையில், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்தார் பாபர் அசாம். ஆனால் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டெவான் கான்வே அந்த கேட்ச்சை தவறவிட்டார். அதன்பின்னர் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடியதுடன் ஃபார்முக்கு திரும்பி, இழந்த தன்னம்பிக்கையையும் திரும்பப்பெற்றார் பாபர் அசாம்.
ஐபிஎல் 2023: கொச்சியில் ஐபிஎல் ஏலம்..! கூடுதல் தொகையால் குதூகலத்தில் ஐபிஎல் அணிகள்
அந்த வாய்ப்பை பயன்படுத்தி பாபர் அசாம் அரைசதம் அடித்தார். பாபர் அசாம் நன்றாக ஆடினால், ரிஸ்வானின் எனர்ஜியும் அதிகமாகும். ரிஸ்வானும் அபாரமாக ஆடி அரைசதம் அடிக்க, பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தின் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான மிட்செல் சாண்ட்னெரும் ஒரு கேட்ச்சை தவறவிட்டார். கேட்ச்களை தவறவிட்டது மட்டுமல்லாது, ரன்களை தடுப்பதிலும் கோட்டைவிடனர். மிஸ்ஃபீல்டும் நிறைய செய்தனர். வழக்கமாக மிகச்சிறப்பாக ஃபீல்டிங் செய்யும் நியூசிலாந்து அணி, இன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக மோசமான ஃபீல்டிங்கால் தான் தோல்வியை தழுவியது.