
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு வீரர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஃபிசியோ பாட்ரிக் ஃபர்ஹாட்டிற்குத்தான் முதலில் கொரோனா உறுதியானது. அவரைத்தொடர்ந்து டெல்லி கேபிடள்ஸ் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானது.
இதையடுத்து கடந்த 16ம் தேதியிலிருந்தே அந்த அணியை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை(ஏப்ரல் 20) டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி புனேவில் நடப்பதாக இருந்தது.
ஆனால் டெல்லி அணியோ மும்பையில் உள்ளது. ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் மும்பையில் இருந்து புனே செல்லும் வழியில் கொரோனா பரவல் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக, டெல்லி கேபிடள்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டியை புனேவிலிருந்து மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்திற்கு மாற்றியுள்ளது பிசிசிஐ.