
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடும் தினேஷ் கார்த்திக், அதிரடியாக ஆடி டெத் ஓவர்களில் மிகச்சிறப்பாக ஆர்சிபி அணிக்கு போட்டிகளை முடித்து கொடுத்துவருகிறார்.
இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்கோர் - 32*(14), 14*(7), 44*(23), 7*(2), 34(14), 66*(34) ஆகும். அவரது ஸ்டிரைக் ரேட் 209.57 ஆகும். தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் அசத்திவருகிறார்.
தினேஷ் கார்த்திக் பொதுவாக நல்ல திறமையான வீரர் தான். அவர் போட்டிகளை முடித்து கொடுக்கும் வல்லமை பெற்றவர் தான். ஆனால் இந்த சீசனில் எந்த விஷயத்தில் அவர் மேம்பட்டிருக்கிறார் என்றால், நிதானமான மனநிலையில் தான். ஆம்.. எப்பேர்ப்பட்ட நெருக்கடியான, இக்கட்டான சூழல்களிலும் இந்த சீசனில் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் இருக்கிறார். பதற்றமோ, பயமோ இல்லாமல் நிதானமாக, தெளிவாக இருப்பதால்தான் அவரால் போட்டிகளை முடித்து கொடுக்க முடிகிறது.
2018 நிதாஹஸ் டிராபி ஃபைனலில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து முடித்து கொடுத்ததன் விளைவாக, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், அந்த இடத்தை அடுத்த ஓராண்டில் மீண்டும் இழந்துவிட்டார்.2019ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடியதுதான் அவர் ஆடிய கடைசி சர்வதேச டி20 போட்டி.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்திய டி20 அணியில் அவர் ஆடவில்லை. இப்போது மீண்டும் செம ஃபார்மில் அருமையாக ஆடிக்கொண்டிருப்பதால், டி20 உலக கோப்பையும் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் இடம் கொடுக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க விரும்புவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார். நான் என்ன சொல்கிறேன் என்றால், தினேஷ் கார்த்திக்கின் வயதை பார்க்காதீர்கள். அவரது ஆட்டம் மற்றும் அவர் பேட்டிங்கில் என்ன கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் பாருங்கள் என்பேன். தினேஷ் கார்த்திக் அவரது அபாரமான பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றுகிறார். டி20 உலக கோப்பையில் 6-7ம் வரிசைகளில் ஒரு வீரர் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை தினேஷ் கார்த்திக் செய்துகொடுப்பார் என்று கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.