
தேவ்தத் படிக்கல் இளம் அதிரடியான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். கடந்த 2 சீசன்களில் ஆர்சிபி அணியில் ஆடிவந்த தேவ்தத் படிக்கல்லை ரூ.7.75 கோடி கொடுத்து இந்த சீசனில் ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
கடந்த சீசனில் அபாரமாக பேட்டிங் ஆடிய படிக்கல், ஆர்சிபி அணிக்காக 52 பந்தில் சதமடித்து அசத்தினார். இதுதான் இந்திய அணிக்காக ஆடாத ஒரு வீரர் ஐபிஎல்லில் அடித்த அதிவேக சதம். கடந்த சீசனில் 411 ரன்களை குவித்தார் தேவ்தத் படிக்கல்.
அவரை 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி தக்கவைக்காமல் விடுவித்தது. படிக்கல்லை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்து அவரை ஓபனிங்கில் இறக்கிவருகிறது. இந்த சீசனிலும் பட்லருடன் ஓபனிங்கில் இறங்கி நன்றாக ஆடிவருகிறார் படிக்கல்.
கேகேஆருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் தொடக்க வீரர் பட்லர் சதமடிக்க, அவருடன் இணைந்து நல்ல தொடக்கம் அமைய காரணமாக இருந்த படிக்கல் 18 பந்தில் 24 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல்லில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை படிக்கல் எட்டினார். 35வது ஐபிஎல் இன்னிங்ஸில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை படிக்கல் எட்டினார்.
இதன்மூலம் ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தை ரிஷப் பண்ட்டுடன் பகிர்ந்துள்ளார். 36 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டிய கௌதம் கம்பீர், 37 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய தோனி, ரோஹித் ஆகியோர் சாதனைகளை தகர்த்து 3ம் இடத்தை பிடித்துள்ளார் படிக்கல்.
ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய இந்திய வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் (31 இன்னிங்ஸ்)
சுரேஷ் ரெய்னா (34 இன்னிங்ஸ்)
ரிஷப் பண்ட் (35 இன்னிங்ஸ்)
தேவ்தத் படிக்கல் (35 இன்னிங்ஸ்)
கௌதம் கம்பீர் (36 இன்னிங்ஸ்)
ரோஹித் சர்மா (37 இன்னிங்ஸ்)
தோனி (37 இன்னிங்ஸ்)