MI vs DC: பும்ரா அபார பவுலிங்.. பவல், ரிஷப்பின் அதிரடியால் நல்ல ஸ்கோரை அடித்த DC..! MI-க்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published May 21, 2022, 9:33 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடித்து, 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், அந்த அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை. 

ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும். தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும். எனவே வெற்றி கட்டாயத்தில் இன்று டெல்லி அணி களமிறங்கி ஆடிவருகிறது. 

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் ப்ரெவிஸ், திலக் வர்மா, டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ரமன் தீப் சிங், ரித்திக் ஷோகீன், பும்ரா, ரிலே மெரிடித், மயன்க் மார்கண்டே.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 3வது ஓவரில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பிரித்வி ஷாவும் 24 ரன்களில் ஆட்டமிழக்க, சர்ஃபராஸ் கானும் 10 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ரோவ்மன் பவலும் பொறுப்புடனும், அதேவேளையில் அடித்தும் ஆடியதால் டெல்லி அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 5வது விக்கெட்டுக்கு பவலும் ரிஷப்பும் சேர்ந்து 75 ரன்களை சேர்த்தனர். ரிஷப் பண்ட் 39 ரன்களும், பவல் 43 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் இறங்கிய அக்ஸர் படேல், 10 பந்தில் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்து, 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  பும்ரா அபாரமாக பந்துவீசி பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரோவ்மன் பவல் ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த போட்டி நடந்துவரும் அந்த குறிப்பிட்ட பிட்ச் பேட்டிங்கிற்கு சவாலானது என்பதால் இந்த இலக்கு மும்பைக்கு சவாலாக இருக்கும்.
 

click me!