
ஐபிஎல் 15வது சீசன் இன்று தொடங்கியது. இன்று மும்பையில் நடந்துவரும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதின. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடக்கவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பல பிரச்னைகள் உள்ளன. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகிய முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவர்கள் இன்னும் இந்தியா வரவில்லை.
அதேபோல அன்ரிக் நோர்க்யா மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகிய வீரர்களும் முதல் சில போட்டிகளில் ஆடமாட்டார்கள். எனவே முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் யாரும் ஆடாதது டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பெரும் பிரச்னையாக இருக்கும். ஆனாலும் அதை ஈடுகட்டும் அளவிற்கான வீரர்கள் டெல்லி அணியிடம் உள்ளனர்.
தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் நியூசிலாந்தின் டிம் சேஃபெர்ட் ஆகிய இருவரும் ஆடுவார்கள். 3ம் வரிசையில் யஷ் துல், 4ம் வரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட் ஆகியோரும், 5ம் வரிசையில் சரஃபராஸ் கானும், 6ம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸின் ரோவ்மன் பவலும் ஆடுவார்கள். ஆல்ரவுண்டர்களாக ஷர்துல் தாகூர், லலித் யாதவ், அக்ஸர் படேல் ஆகிய மூவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக கலீல் அகமது மற்றும் சேத்தன் சக்காரியாவும் ஆடுவார்கள்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டிம் சேஃபெர்ட், யஷ் துல், மந்தீப் சிங், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், லலித் யாதவ், கலீல் அகமது, சேத்தன் சக்காரியா.