அஷ்வின், ரஹானேவை டெல்லி அணியில் எடுத்தது ஏன்..? சூட்சமத்தை சொன்ன ரிக்கி பாண்டிங்

By karthikeyan VFirst Published Dec 14, 2019, 4:45 PM IST
Highlights

ஐபிஎல் 2020 சீசனுக்கு ரஹானே மற்றும் அஷ்வின் ஆகிய இருவரையும் டெல்லி கேபிடள்ஸ் அணியில் எடுத்தது ஏன் என்ற காரணத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. அதற்கான ஏலம் வரும் 19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 

ஏலத்திற்கு முன்னதாக அனைத்து அணிகளும் பரஸ்பர புரிதலின் பேரில் வீரர்களை பரிமாற்றம் செய்துகொண்டனர். மேலும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டனர். 

இந்த வீரர்கள் பரிமாற்றத்தில் மிகப்பெரிய வீரர்களை தட்டி தூக்கியது டெல்லி கேபிடள்ஸ் அணிதான். டெல்லி கேபிடள்ஸ் அணி முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கடந்த சீசனில் படுதீவிரமாக செயல்பட்டது. ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக உள்ள அந்த அணி, கடந்த சீசனில் நன்றாக ஆடி தகுதிச்சுற்று வரை சென்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சீசனில்தான் தகுதிச்சுற்றுக்கே சென்றது. 

இந்நிலையில், வீரர்கள் பரிமாற்றத்தில், பஞ்சாப் அணியின் கேப்டனாக கடந்த 2 சீசன்களாக இருந்த அஷ்வினையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரஹானேவையும் டெல்லி கேபிடள்ஸ் அணி அந்தந்த அணிகளிடமிருந்து வாங்கியுள்ளது. 

ரஹானே மற்றும் அஷ்வின் ஆகிய இரண்டு திறமையான மற்றும் அனுபவமான வீரர்களை வாங்கி மேலும் வலுவடைந்துள்ளது டெல்லி அணி. 

இந்நிலையில், ரஹானே மற்றும் அஷ்வின் ஆகிய இருவரையும் அணியில் எடுத்தது குறித்து பேசியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பாண்டிங், டெல்லி கோட்லா(அருண் ஜேட்லி ஸ்டேடியம்) ஆடுகளத்திற்கு ஏற்ற வீரர்கள் இவர்கள். நல்ல அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் அந்த ஆடுகளத்தில் மிகச்சிறப்பாக ஆடுவார்கள். இதுகுறித்து கடந்த சில மாதங்களாக தீவிரமாக பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுதான் இருவரையும் எடுத்தோம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 

வறண்ட ஆடுகளமான டெல்லி மைதான ஆடுகளத்தில் அஷ்வின் தனது அனுபவத்தையும் தன்னிடம் இருக்கும் பவுலிங் வெரைட்டிகளையும் பயன்படுத்தினால் எதிரணிக்கு கண்டிப்பாக ஆபத்துதான்.
 

click me!