வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 14, 2019, 2:49 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நாளை(15) தொடங்குகிறது.

15, 18, 22 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் கட்டாக் ஆகிய இடங்களில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ள தவான் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக முறையே மயன்க் அகர்வால் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் நடக்கவுள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம். ரோஹித்துடன் தொடக்க வீரராக ராகுல் இறங்குவார். தவானுக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவான் இல்லையென்றால், இந்திய அணி நிர்வாகத்தின் அடுத்த தேர்வு ராகுல் தான். அதுமட்டுமல்லாமல், ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரிலும் அபாரமாக ஆடியுள்ளார். எனவே ரோஹித்துடன் அவர் தொடக்க வீரராக இறங்குவார். 

மூன்றாம் வரிசையில் கோலி, நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர். எல்லா தொடருக்குமான அணிகளிலும் எடுக்கப்பட்டு, ஆனால் ஆட வாய்ப்பே கொடுக்கப்படாமல் பென்ச்சில் உட்கார வைக்கப்படும் மனீஷ் பாண்டேவிற்கு இந்த போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்படலாம். மனீஷ் பாண்டேவை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக எடுக்க வாய்ப்புள்ளது. ஐந்தாம் வரிசையில் மனீஷ் பாண்டே, ஆறாம் வரிசையில் ரிஷப் பண்ட். 

போட்டி நடக்கவுள்ள சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால் கண்டிப்பாக 3 ஸ்பின்னர்கள் அணியில் இருப்பார்கள். சென்னை சேப்பாக்கத்தில் அதிகமாக ஆடிய அனுபவம் கொண்ட ஜடேஜா கண்டிப்பாக அணியில் இருப்பார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் பங்களிப்பு செய்யக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால் ஜடேஜா கண்டிப்பாக அணியில் இருப்பார். மற்றொரு ஸ்பின்னராக குல்தீப் யாதவ் ஆடுவார். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் ஆர்டரில் பெரும்பாலானோர் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹல் ஆடுவதற்கு வாய்ப்பில்லை.  மூன்றாவது ஸ்பின் பவுலிங் ஆப்சனாக கேதர் ஜாதவ் இருப்பார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமியும் தீபக் சாஹரும் ஆடுவார்கள்.

முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், தீபக் சாஹர், ஷமி. 

click me!