IPL 2021 ஷ்ரேயாஸ் ஐயரின் முதிர்ச்சியான பேட்டிங்கால் மும்பையை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் வெற்றி..!

By karthikeyan VFirst Published Oct 2, 2021, 7:56 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை எளிதாக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா வெறும் 7 ரன்னில் 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான குயிண்டன் டி காக்கும் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

நன்றாக தொடங்கிய சூர்யகுமார் யாதவ், கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. 33 ரன்கள் அடித்தார் சூர்யகுமார் யாதவ். பொல்லார்டு(6), ஹர்திக் பாண்டியா(17) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஜெயந்த் யாதவ் டெத் ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாச, இன்னிங்ஸின் கடைசி பந்தில் க்ருணல் பாண்டியா சிக்ஸர் விளாச, 20 ஓவரில் 129 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

130 ரன்கள் என்பது ஸ்லோவான ஷார்ஜா பிட்ச்சில் சவாலான இலக்குதான் என்பதால், அதைத்தடுக்கும் நம்பிக்கையுடன் 2வது இன்னிங்ஸை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. 

அதேபோலவே ஆரம்பத்திலிருந்தே சீரான இடைவெளியில் டெல்லி அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஷிகர் தவான்(8) ரன் அவுட்டானார். பிரித்வி ஷாவை 6 ரன்னில் க்ருணல் பாண்டியா வெளியேற்ற, ஸ்டீவ் ஸ்மித்தை 9 ரன்னில் குல்ட்டர்நைல் வீழ்த்தினார்.

ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து பொறுப்புடன் ஆடிவந்த நிலையில், ரிஷப் பண்ட் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அக்ஸர் படேல்(9), ஷிம்ரான் ஹெட்மயர்(15) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். ஆனால் இலக்கு கடினமானது இல்லை; பந்துக்கு நிகரான ரன்னே தேவை என்பதால் அவசரப்படாமல் நிதானமாக நின்று கடைசிவரை ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அஷ்வின் ஆடினார். பும்ரா, போல்ட் ஆகியோர் அருமையாக பந்துவீசி ரன்னை கட்டுப்படுத்தினாலும், பும்ராவின் 18வது ஓவர் மற்றும் போல்ட்டின் 19வது ஓவரின் கடைசி பந்துகளில் பவுண்டரிகளை அடித்து இலக்கை நோக்கி டெல்லி அணியை நகர்த்தினார் ஷ்ரேயாஸ் ஐயர். கடைசி ஓவரின் முதல் பந்தில் அஷ்வின் சிக்ஸர் அடித்து டெல்லி அணியை வெற்றி பெற செய்தார்.

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி தொடர்ந்து 6ம் இடத்திலேயே உள்ளது.
 

click me!