இத்தனை வருஷம் தல தோனி கூட இருந்துட்டு இதைக்கூட கத்துக்கலைனா எப்படி - தீபக் சாஹர்

By karthikeyan VFirst Published Jul 22, 2021, 9:52 PM IST
Highlights

ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்செல்வதை தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.
 

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முழுக்காரணம் தீபக் சாஹர் தான். 276 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 193 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பொறுப்புடனும், அதேவேளையில் மிகச்சிறப்பாகவும் பேட்டிங் ஆடி, புவனேஷ்வர் குமாரின் ஒத்துழைப்புடன் கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்று இந்திய அணியை வெற்றி பெற செய்தார் தீபக் சாஹர்.

தீபக் சாஹரின் முதிர்ச்சியான பேட்டிங்(69*) தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த தீபக் சாஹர் தான் அந்த போட்டியின் ஆட்டநாயகன். 

இந்திய அணி இன்னிங்ஸின் 27வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட தீபக் சாஹர், அவசரப்படாமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றார். அதனால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது.

இலக்கை விரட்டும்போது ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்செல்லும் வித்தையை தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் தீபக் சாஹர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தீபக் சாஹர், தோனி போட்டிகளை எப்படி முடித்துவைப்பார் என்று பார்த்த அனுபவம் எனக்கு உதவியது. தோனி போட்டிகளை முடித்துவைப்பதை நிறைய பார்த்திருக்கிறேன். அவருடன் பேசும்போதெல்லாம், முடிந்தவரை போட்டியை கடைசி வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்றுதான் சொல்வார் தோனி. அனைவரும் நாம் ஜெயிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். கடைசிவரை எடுத்துச்செல்லும்போது ஆட்டம் த்ரில்லாகவும் இருக்கும் என்று தோனி கூறுவார் என்று தீபக் சாஹர் தெரிவித்தார்.

ஐபிஎல்லில் தோனி கேப்டனாக இருந்து வழிநடத்தும் சிஎஸ்கே அணியில், தோனியின் ஆஸ்தான பவுலராக தீபக் சாஹர் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.
 

click me!