ராகுல் டிராவிட் இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை..! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 22, 2021, 8:02 PM IST
Highlights

ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகமாட்டார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

இளம் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் டிராவிட்டுக்கு நிகர் ராகுல் டிராவிட்டே. இந்தியா அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்து, பல இளம் திறமைசாலிகளை மெருகேற்றி இந்திய அணிக்கு கொடுத்த ராகுல் டிராவிட், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் இருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார். ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி இலங்கையில் சிறப்பாக ஆடிவருகிறது.

இந்திய அணிக்கு ஒரு தொடருக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருப்பது, அடுத்த பயிற்சியாளர் அவர் தான் என்பதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. ஆனால் ரவி சாஸ்திரியின் பயிற்சியிலும் இந்திய அணி ஐசிசி டிராபி எதையும் வெல்லவில்லை என்றாலும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. ஆசியாவிலும் சரி, ஆசியாவிற்கு வெளியேயும் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றிருக்கிறது. ஆஸி., மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது.

ராகுல் டிராவிட் மிகப்பெரிய லெஜண்ட்;  சிறந்த பயிற்சியாளர் என்றாலும், ரவி சாஸ்திரியை நீக்குவதற்கான எந்த காரணமும் இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியின் பயிற்சியாளருக்கான போட்டியில் ராகுல் டிராவிட் தன்னை இணைத்துக்கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒருவேளை அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பினால், அவருக்கு ஒரே போட்டி ரவி சாஸ்திரியாகத்தான் இருப்பார். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. ரவி சாஸ்திரியே தொடர்ந்து பயிற்சியாளராக நீடிப்பார் என்றே நினைக்கிறேன் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!