இந்த 2 சிஎஸ்கே வீரர்களும் கூடிய சீக்கிரம் இந்தியாவிற்காக ஆடுவார்கள்..! முன்னாள் வீரர் கருத்து

By karthikeyan VFirst Published May 15, 2022, 6:51 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான முகேஷ் சௌத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகிய இருவரும் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. இந்த சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்தது. குறிப்பாக பல ஃபாஸ்ட் பவுலர்கள் அசத்திவருகின்றனர். உம்ரான் மாலிக், யஷ் தயால், மோசின் கான், முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்துள்ளனர்.

ஐபிஎல் 15வது சீசனில் சரியாக ஆடாத சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டாலும், சிஎஸ்கே அணி 2 சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த சீசனில் தீபக் சாஹர் இல்லாத குறை தெரியாத அளவிற்கு, பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி சிஎஸ்கே அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்துள்ளார் முகேஷ் சௌத்ரி. சிமர்ஜீத் சிங்கும் அருமையாக பந்துவீசியுள்ளார்.

முகேஷ் சௌத்ரி 12 போட்டிகளில்(குஜராத்டைட்டன்ஸுக்கு எதிரான போட்டிக்கு முன் வரை) 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பவர்ப்ளேயில் கட்டுக்கோப்புடன் வீசி எதிரணிகளின் ஸ்கோர் வேகத்தை கட்டுப்படுத்தியதுடன், முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சிஎஸ்கே கேப்டன் தோனியே, முகேஷ் சௌத்ரி மற்றும் சிமர்ஜீத் ஆகிய இருவரின் பவுலிங்கையும் பாராட்டி பேசியிருந்த நிலையில், அவர்கள் விரைவில் இந்தியாவிற்காக ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய தீப்தாஸ் குப்தா, சிஎஸ்கே அணி முகேஷ் சௌத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகிய இருவருக்கும் நிறைய வாய்ப்பளித்தது. சிஎஸ்கே அணி பல வீரர்களை உருவாக்கியிருக்கிறது. அவர்களுக்கு வழிகாட்டி பெரிய வீரர்களாக வளர்த்துவிட்டிருக்கிறது. முகேஷ்  சௌத்ரியிடம் ஏதோ ஒரு சிறப்பை தோனி பார்த்திருக்கிறார். நல்ல வழிகாட்டுதலின் மூலம் சிமர்ஜீத் சிங்கின் ஆட்டத்தை மேம்படுத்த முடியும். முகேஷ் சௌத்ரி மற்றும் சிமர்ஜீத் சிங் ஆகிய இருவரும் சிஎஸ்கே அணியின் முன்னணி பவுலர்கள். இவர்கள் விரைவில் இந்தியாவிற்காக ஆடுவார்கள் என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

click me!