இலங்கை தொடர் தள்ளிப்போனதால் இந்திய அணிக்கு பெரிய பிரச்னை..!

By karthikeyan VFirst Published Jul 11, 2021, 9:03 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தள்ளிப்போவதால் இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையை பற்றி பேசியுள்ளார் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா.
 

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. வரும் 13ம் தேதி இந்த தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைகிறது.

இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணியில் இடம்பெற்றிருந்த தொடக்க வீரர் ஷுப்மன் கில் காயத்தால் தொடரிலிருந்து விலகினார். கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய 2 தொடக்க வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். பெரும்பாலும் அது மயன்க் அகர்வாலாகவே இருக்கும். கேஎல் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கும் திட்டத்தில் உள்ளது இந்திய அணி.

எனவே மயன்க் அகர்வால் - ரோஹித் ஆகிய 2 தொடக்க வீரர்களில் ஒருவர் காயமடைந்தால், இந்திய அணிக்கு பெரும் பிரச்னை ஏற்படும் என்பதால், இலங்கையில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரையும் இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்கு அழைக்க இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தேர்வாளர்களும் பிசிசிஐயும் மறுத்துவிட்டது.

ஆனால் இலங்கை தொடரை முடித்துவிட்டு அவர்கள் செல்லலாம். அப்படியிருக்கையில், இலங்கை தொடர் தள்ளிப்போனதால், அவர்கள் இருவரும் இங்கிலாந்து செல்வது வீண் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஜூலை 29ம் தேதி தான் இலங்கைக்கு எதிரான தொடர் முடிகிறது என்பதால், அதன்பின்னர் பிரித்வி ஷாவும் படிக்கல்லும் இங்கிலாந்து சென்றால், 10 நாட்கள் குவாரண்டினில் இருக்க வேண்டும். அதன்பின்னர் பயிற்சியில் ஈடுபட்டு, அதற்குப்பிறகு தான் இந்திய அணிக்காக களமிறங்க முடியும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. எனவே பிரித்வியும் படிக்கல்லும் இங்கிலாந்துக்கு சென்றாலும், முதல் 3 போட்டிகளில் ஆடமுடியாது. வெறும் 2 டெஸ்ட் போட்டிகளுக்காக அவர்கள் இங்கிலாந்து செல்வது வீண் என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

click me!