#ZIMvsBAN டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வேவை 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி..!

By karthikeyan VFirst Published Jul 11, 2021, 6:34 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 220 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 150 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரைத்தவிர லிட்டன் தாஸ்(95) மற்றும் கேப்டன் மோமினுல் ஹக்(75) ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர். இவர்களை தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 468 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் கைலானோ(87) மற்றும் கேப்டன் பிரண்டன் டெய்லர்(81) ஆகிய இருவரும் சிறப்பாக ஆடினர். மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் முதல் இன்னிங்ஸில் 276 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி.

192 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி, ஷத்மான் இஸ்லாம்(117)  மற்றும் ஷாண்டோ(115) ஆகிய இருவரின் அபாரமான சதத்தால் வெறும் ஒரு விக்கெட் இழப்பிற்கு 284 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

வங்கதேச அணி மொத்தமாக 476 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 477 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி, 256 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வங்கதேச அணி.
 

click me!