இவனுங்க ஆடுறத பார்த்தா சின்ன பசங்க கிரிக்கெட்டையே வெறுத்துருவாங்க.! பாகிஸ்தான் அணியை விளாசிய அக்தர்

By karthikeyan VFirst Published Jul 11, 2021, 8:05 PM IST
Highlights

தற்போதைய பாகிஸ்தான் அணி ஆடுவதை பார்த்தால் எந்த சிறுவர்களும் கிரிக்கெட் ஆட விரும்பவே மாட்டார்கள் என்று மிகக்கடுமையாக விளாசியுள்ளார் ஷோயப் அக்தர்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் அணிகளில் ஒன்றாக திகழ்ந்த பாகிஸ்தான் அணி, இம்ரான் கான் கேப்டன்சியில் 1992ல் உலக கோப்பையையும் வென்றது. மிகச்சிறந்த அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் கூட இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு சிறந்த கிரிக்கெட்டை ஆடும் அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், இப்போது மிக மோசமாக ஆடிவருகிறது. அண்மைக்காலமாக அந்த அணியின் செயல்பாடு மோசமாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் தொடரில், முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும், அனுபவமற்ற வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.

முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், 2வது போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் ஆடுவதை பார்த்து விரக்தியும் வெறுப்பும் அடைந்த ஷோயப் அக்தர், அந்த அணியை மிகக்கடுமையாக விளாசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், பந்துக்கு நிகரான ரன்களைக்கூட அடிக்கமுடியாத அணியாக உள்ளது பாகிஸ்தான். மிக மிக மிக மோசமான ஆட்டம். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 0-3 என பாகிஸ்தான் ஒயிட்வாஷ் ஆகும். பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங் டிரெண்ட் ஆகியுள்ளது. 

யாரையும் விமர்சிக்க வேண்டும் என்று யாருக்கும் விருப்பமில்லை. ஆனால் இந்த பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ஆடுவதை பார்த்தால், எந்த குழந்தை கிரிக்கெட் ஆட விரும்பும்? யாருமே கிரிக்கெட் பார்க்கக்கூடாது என்பதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் திட்டமாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் ஆடுவதை போல ஆடி ஆல் அவுட்டாகிறது. டி20 கிரிக்கெட்டில் 150-175 ரன்கள் அடிக்கும் பாகிஸ்தான், ஒருநாள் போட்டிகளிலும் அதே ஸ்கோரையே அடிக்கிறது என்று விளாசியுள்ளார் அக்தர்.
 

click me!