எப்பேர்ப்பட்ட வீரரை உட்கார வச்சுட்டு சின்ன பையன டீம்ல எடுத்து அசிங்கப்படுத்துறீங்க.. மூத்த வீரருக்கு வாய்ப்பு கேட்கும் முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 26, 2019, 1:11 PM IST
Highlights

டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ரிதிமான் சஹாவைத்தான் எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். 
 

டெஸ்ட் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருந்துவந்த ரிதிமான் சஹா, காயத்தால் கடந்த ஆண்டு ஆடமுடியாமல் போனதை அடுத்து, இங்கிலாந்து சுற்றுப்பயணம், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக ஆடினார். 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போதிலும், பேட்டிங்கில் நன்றாக ஆடினார். இங்கிலாந்தில் ஒரு சதம், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் அடித்து அசத்தினார். ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் படுமோசமாக இருந்தது. இப்போது ஓரளவிற்கு தேறிவிட்டார் என்றாலும் இன்னும் முழுமையான விக்கெட் கீப்பராகவில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், விக்கெட் கீப்பிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் அந்த தொடர்களின்போதே ஓங்கி ஒலித்தன. ஆனால் மூன்றுவிதமான போட்டிகளுக்கும் ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக உருவாக்கிவருவதால், இளம் வீரரான அவரது சொதப்பல்களை பற்றி கவலைப்படாமல் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

ரிதிமான் சஹா உலகத்தரம் வாய்ந்த சிறந்த விக்கெட் கீப்பர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் காயத்தில் இருந்து மீண்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்தார். ஆனாலும் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் தொடங்கவுள்ள நிலையில், அந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ரிதிமான் சஹாவைத்தான் சேர்க்க வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள தீப்தாஸ் குப்தா, சமகால கிரிக்கெட்டில் ரிதிமான் சஹா, உலகளவில் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்திய அணி 5 பவுலர்களுடன் ஆடும்பட்சத்தில், ரிதிமான் சஹா ஒரு சிறந்த பேட்ஸ்மேனா என்றால், அந்தளவிற்கு சிறந்த பேட்ஸ்மேன் இல்லை. ரிஷப் பண்ட் அளவிற்கு சஹாவை சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லமுடியாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பரைத்தான் அணியில் எடுக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் எப்படி சொதப்பினார் என்பதை பார்த்தோம். எனவே சஹாவை டெஸ்ட் அணியில் ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என்று தீப்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார். 
 

click me!