அந்த பையன டெஸ்ட் டீம்ல சேருங்க.. எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பான்.. ஜாகீர் கான் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 26, 2019, 12:28 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை கண்டிப்பாக டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்று முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். 

பேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்துவந்த இந்திய அணி தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாக திகழ்கிறது. பேட்டிங்கில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற வெற்றிகள் எல்லாம் பெரும்பாலும் சிறப்பான பேட்டிங்கின் மூலமாகவே பெற்றதாக இருக்கும். 

ஆனால் தற்போது இந்திய அணி பவுலிங்கால் அதிகம் வெற்றி பெறும் இடத்தில் உள்ளது. பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணியின் பவுலிங் யூனிட் வேற லெவலில் அசத்துகிறது. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், நல்ல வேகம், துல்லியமான பவுலிங் என பும்ரா மிரட்டிவரும் நிலையில், கூடுதல் வலுசேர்க்கும் வகையில் இந்திய அணியில் இணைந்திருக்கிறார் நவ்தீப் சைனி. 

ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடி தனது வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டியதுடன் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்த நவ்தீப் சைனி, உலக கோப்பையில் வலையில் பந்துவீச இங்கிலாந்து சென்றிருந்தார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் எடுக்கப்பட்டிருந்தார். அணி நிர்வாகம் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டார். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக ஆடிய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில் இரண்டு விக்கெட்டுகள், சூப்பர் பேட்ஸ்மேன்கள். நிகோலஸ் பூரான் மற்றும் ஹெட்மயர் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நவ்தீப் சைனி தான் ஆட்டநாயகன். 

அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் ஆடினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், வேகத்தில் மிரட்டினார். 150 கிமீ வேகத்தில் அசால்ட்டாக வீசுகிறார் நவ்தீப் சைனி. 

இந்திய பவுலர்கள் 150 கிமீ வேகத்தில் வீசுவதெல்லாம் அரிதினும் அரிது. ஆனால் நவ்தீப் சைனி அசால்ட்டாக 150 கிமீ வேகத்தில் வீசி மிரட்டுகிறார். வேகமாக மட்டுமல்லாமல் துல்லியமாகவும் நல்ல லைன் அண்ட் லெந்த்திலும் வீசுகிறார். 

இந்நிலையில், டி20 அணியில் மட்டுமே ஆடிவரும் சைனியை டெஸ்ட் அணியிலும் எடுக்க வேண்டும் என்று ஜாகீர் கான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜாகீர் கான், டெஸ்ட் கிரிக்கெட் நவ்தீப் சைனிக்கு மிகவும் பொருத்தமான ஆட்டம். வேகமாக மட்டுமல்லாமல் நல்ல லெந்த்தில் வீசுகிறார் சைனி. நான் நிறைய முறை சொல்லியிருக்கிறேன். நவ்தீப் சைனி, வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வீசும் அவுட்ஸ்விங், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு செம டஃப்ஃபாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக சைனி திகழ்வார். அவரது ஃபிட்னெஸில் நன்றாக கவனம் செலுத்தி, தொடர்ச்சியாக இதேமாதிரி வீசுவாரேயானால், அவர் மிகச்சிறந்த பவுலராக ஜொலிப்பார். அனுபவம் அதிகமாக அதிகமாக இன்னும் மேம்படுவார் என்று ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!