கிரிக்கெட்டில் ரொம்ப கொஞ்ச பேரு தான் அந்த பையன மாதிரி.. கிரேட் மேட்ச் வின்னர் அவன்.. இளம் வீரரை தாறுமாறா புகழ்ந்த சாஸ்திரி

By karthikeyan VFirst Published Sep 26, 2019, 11:37 AM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட்டின் மீது ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளன. தோனியின் கெரியர் முடிந்துவிட்டதால், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டு வருகிறார். 
 

ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரிலேயே டெஸ்ட் அணியில் அறிமுகமாகிவிட்டார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணிலும் சதமடித்து, அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார். இதையடுத்து அவர்தான் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்ற சூழல் உருவான நிலையில், உலக கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். 

நெருக்கடியான சூழல், நெருக்கடியில்லாமல் நிதானமாக ஆடக்கூடிய சூழல் என அனைத்து சூழல்களிலும் சொதப்பி தனது பெயரை தானே கெடுத்துக்கொண்டார். அவரது தவறான ஷாட் செலக்‌ஷன் மற்றும் அவசரம் ஆகியவையே, அவர் விரைவில் விக்கெட்டை இழக்க காரணம். அவர் மீது அழுத்தம் கொடுக்காமல், அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்தாலும், மறைமுகமாக அவர் மீது ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. அணி நிர்வாகமும் அந்த அழுத்தத்தை அவர் மீது திணித்துக்கொண்டே இருக்கிறது. 

ரிஷப் பண்ட்டின் தவறான ஷாட் செலக்‌ஷனை கண்டித்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் தொடர்ந்து இதுபோல் ஆடினால் முட்டிக்கு முட்டி தட்டிவிடுவேன் என்று பாசமாக கண்டித்தார். அந்த கண்டிப்பு மிகவும் கடுமையானது இல்லையென்றாலும், அது ஒருவிதமான அழுத்தத்தை ரிஷப் பண்ட்டிற்கு ஏற்படுத்துகிறது. அதேபோல பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற பேட்டிங்கை சாடியிருந்தார். இதுமாதிரியான விஷயங்களால், கவனமாக ஆட வேண்டும் என்ற எண்ணமே ரிஷப் பண்ட்டை அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவிடாமல் தடுத்துவிடுகிறது. 

அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை கையாளும் விதத்தை கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். ரிஷப் பண்ட்டின் கேரக்டரை தெரிந்துகொண்டு உளவியல் ரீதியாக அவரை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவரை வழிநடத்தினால்தான் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும் என அணி நிர்வாகத்துக்கு யுவராஜ் சிங் ஆலோசனை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட் நெருக்கடியில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவர். உலகத்தரம் வாய்ந்த வீரர் மட்டுமல்லாது மேட்ச் வின்னரும் கூட. உலக கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மாதிரியான வீரர்கள் மிகச்சிலரே. ரிஷப் பண்ட் விஷயத்தில் அணி நிர்வாகம் பொறுமையாகவே உள்ளது. பண்ட் ஒரு ஸ்பெஷல் கிட். அவர் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ளார். அவர் இப்போது கற்றுக்கொண்டு மட்டுமே இருக்கிறார். எனவே அவருக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு அதிகமாக உள்ளது என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார். 

எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் ஆடுவார் என்பது உறுதியாகிவிட்டது. எனவே ரித்திமான் சஹாவுக்கு இந்த தொடரிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. 
 

click me!