டி20யில் மட்டுமில்ல.. ஒருநாள் கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுக்கும் டிவில்லியர்ஸ்

By karthikeyan VFirst Published Jan 18, 2020, 3:44 PM IST
Highlights

டிவில்லியர்ஸ் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ், கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி தனி முத்திரை பதித்தார்.

இவரது அதிரடி ஆட்டத்துக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னாப்பிரிக்காவைக் கடந்து சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் டிவில்லியர்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுவதால், 360 டிகிரி என வர்ணிக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். ஐபிஎல்-லில் ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் டிவில்லியர்ஸ், அந்த அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார்.

114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8765 ரன்களையும், 228 ஒருநாள் போட்டிகளில் ஆடி டிவில்லியர்ஸ் 9577 ரன்களையும்,. 78 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1672 ரன்களையும் குவித்துள்ள டிவில்லியர்ஸ், திடீரென கடந்த 2018ம் ஆண்டின் மத்தியில் ஓய்வு அறிவித்தார். தனது 34வது வயதிலேயே, அதுவும் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென அவர் ஓய்வு அறிவித்தது, ரசிகர்களுக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கும் கூட பேரதிர்ச்சியாக இருந்தது. 

Also Read - சர்ச்சையை கிளப்பிய ஃபின்ச்சின் ஸ்டம்பிங்.. வீடியோ

இதையடுத்து உலக கோப்பையில் டிவில்லியர்ஸ் இல்லாத தென்னாப்பிரிக்க அணி மரண அடி வாங்கி, லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், மீண்டும் தென்னாப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பெற முனைகிறார் டிவில்லியர்ஸ். 

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக்கில் முதல்முறையாக ஆடிவரும் டிவில்லியர்ஸ் இதுகுறித்து பேசியுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ் ஆட வாய்ப்பிருக்கிறது என்றும் இதுகுறித்து டிவில்லியர்ஸிடம் பேசியிருப்பதாகவும் அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிக்பேஷ் லீக்கிற்கு இடையே இதுகுறித்து பேசிய டிவில்லியர்ஸ், நான் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆட விரும்புகிறேன். இதுகுறித்து புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் புதிய இயக்குநர் கிரேம் ஸ்மித் மற்றும் கேப்டன் டுப்ளெசிஸுடன் பேசியிருக்கிறேன். நான் மீண்டும் அணியில் இணைவதை சாத்தியமாக்க அனைவரும் முயற்சித்துவருகிறோம். டி20 அணியில் மட்டுமல்ல.. ஒருநாள் அணியிலும் ஆட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர மற்ற இரண்டு ஃபார்மட்டிலும் ஆட தயாராக இருக்கிறேன் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். 
 

click me!