
துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2024 தொடரின் ஏலம் நடந்தது. இதில், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பாட்டார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். 2ஆவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பை வின்னிங் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதே போன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சதம் அடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கு ஹைதராபாத் அணியில் வாங்கப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஹைதராபாத் அணியில் ரூ.12.50க்கு இடம் பெற்று விளையாடியவர் டேவிட் வார்னர். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஹைதராபாத் அணியில் இருந்த போது ஐபிஎல் தொடரில் 4000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலிலும் வார்னர் இடம் பெற்றிருந்தார். இவ்வளவு ஏன், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் டிராபியை கைப்பற்றியது. இந்த நிலையில், தனது முன்னாள் அணியான ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள டிராவிஸ் ஹெட்டிற்கு வாழ்த்து தெரிவிக்க முயன்றுள்ளார். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இன்ஸ்டாவில் வார்னர் பிளாக் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரால் டிராவிஸ் ஹெட்டிற்கு வாழ்த்து கூற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.