இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ள டேவிட் வார்னர், மும்பை தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடும் வீடியோ வைரலாகிவருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இந்த தொடரின் வெற்றி மூலம் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறின. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் ஆடிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர், காயம் காரணமாக கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்ற டேவிட் வார்னர், காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டு ஒருநாள் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார்.
ICC WTC ஃபைனலில் தயவுசெய்து அந்த பையனை ஆடவைக்காதீங்க.. இவரே போதும்..! கவாஸ்கர் அதிரடி
வரும் 17, 19 மற்றும் 22ம் தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. ஒருநாள் தொடரில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வந்துள்ள டேவிட் வார்னர், மும்பை டிராஃபிக்கில் காத்திருக்கும்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர, அது செம வைரலானது.
மேலும், மும்பை தெருக்களில் சிறுவர்களுடன் டேவிட் வார்னர் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவும் வைரலாகிவருகிறது.
இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால், இந்திய கண்டிஷனுக்கு பழக்கப்படும் விதத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த ஒருநாள் தொடர் மிக முக்கியமானது. ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் ஜெயிக்க, அந்த அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சிறப்பாக ஆடவேண்டியது அவசியம். சர்வதேச கிரிக்கெட்டில் வார்னர் 141 ஒருநாள் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 27 அரைசதங்களுடன் 6007 ரன்களை குவித்துள்ளார்.
ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபாட், அஷ்டான் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.