
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலும் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவரும் விராட் கோலி, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்தும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
ஆனாலும் பேட்டிங்கில் அவரால் இன்னும் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்ள நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கவலையளிக்கிறது.
ஐபிஎல்லில் விராட் கோலி எப்படி ஆடுகிறார், ஃபார்முக்கு திரும்பி தெறிக்கவிடுகிறாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல்லிலும் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் கோலி.
விராட் கோலி மட்டுமல்லாது ரோஹித் சர்மாவும் ஐபிஎல்லில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித் மற்றும் விராட் ஆகிய இருவரும் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாதது கவலையளிக்கும் நிலையில், விராட் கோலிக்கு பலரும் பல அறிவுரைகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில், ஃபார்மில் இல்லாத விராட் கோலிக்கு நீங்கள் என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த டேவிட் வார்னர், இன்னும் 2 குழந்தைகளை பெற்றுக்கொண்டு, கூடுதல் அன்பை என்ஜாய் செய்யவேண்டும்(சொல்லிவிட்டு சிரித்தார்). ஃபார்ம் தற்காலிகம்; கிளாஸ் தான் நிரந்தரம். எனவே அதை தவறவிடக்கூடாது. இது எல்லா சிறந்த பேட்ஸ்மேன்களுக்கும் நிகழும். நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும், ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அடிப்படையான விஷயங்களில் தவறு செய்யக்கூடாது என்றார் வார்னர்.