2 ஓவரில் 5 நோ-பால் வீசிய அர்ஷ்தீப்.. ஷனாகா காட்டடி ஃபினிஷிங்! இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த இலங்கை

By karthikeyan VFirst Published Jan 5, 2023, 9:08 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 20 ஓவரில் 206 ரன்களை குவித்து 207 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்தால் விலகிய சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதியும், ஹர்ஷல் படேலுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும் களமிறங்கினர்.

இந்திய அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.

இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடிவரும் நிலையில், முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். 2வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரின் கடைசி பந்தில் தொடர்ச்சியாக 3 நோ-பால்களை வீசி அதிர்ச்சியளித்தார். அந்த ஒரு பந்துக்கு 3 நோ - பால்கள் வீசியதால் அந்த ஒரு பந்தில் மட்டும் 14 ரன்களை வழங்கினார். ஹாட்ரிக் நோ - பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையையும் படைத்தார் அர்ஷ்தீப் சிங்.

அதிரடியாக ஆடிய இலங்கை தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸும் பதும் நிசாங்காவும் இணைந்து 8.2 ஓவரில் 80 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். நிசாங்கா 33 ரன்களுக்கு அக்ஸர் படேலின் பந்தில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், 52 ரன்களுக்கு சாஹலின் சுழலில் வீழ்ந்தார். பானுகா ராஜபக்சா 2 ரன்னுக்கு உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை இழந்தார். மிடில் ஓவர்களில் இந்திய அணி இலங்கையின் ஸ்கோரை கட்டுப்படுத்தியது.

அதிரடியாக ஆடி 19 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்த சாரித் அசலங்காவை உம்ரான் மாலிக் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார். தனஞ்செயா டி சில்வா 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 16 ஓவரில் 138 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது இலங்கை அணி. அதன்பின்னர் இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா இந்திய பவுலிங்கை சிக்ஸர்களாக விளாசி அடித்து நொறுக்கினார். உம்ரான் மாலிக் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்த ஷனாகா, அர்ஷ்தீப் சிங் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்தார். இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஹாட்ரிக் நோ பால் வீசிய அர்ஷ்தீப்பிற்கு அதன்பின்னர் பவுலிங் கொடுக்காத கேப்டன் ஹர்திக் பாண்டியா, 19வது ஓவரை கொடுத்தார். அதிலும் அடுத்தடுத்து 2 நோ பால்களை வீசி சொதப்பினார் அர்ஷ்தீப்.

கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய ஷனாகா, 20 பந்தில் அரைசதம் அடித்து சாதனையும் படைத்தார். 22 பந்தில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 56 ரன்களை ஷனாகா குவிக்க, 20 ஓவரில் 206 ரன்களை குவித்த இலங்கை அணி, 207 ரன்கள் என்ற கடின இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!