ENG vs NZ 2வது டெஸ்ட்: இரட்டை சதத்தை தவறவிட்ட டேரைல் மிட்செல்.! முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடித்த நியூசி.,

Published : Jun 11, 2022, 10:01 PM IST
ENG vs NZ 2வது டெஸ்ட்: இரட்டை சதத்தை தவறவிட்ட டேரைல் மிட்செல்.! முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடித்த நியூசி.,

சுருக்கம்

 இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, டேரைல்மிட்செலின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது.   

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில்,  2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று(ஜூன்10) தொடங்கி நடந்துவருகிறது. கொரோனா காரணமாக இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால், டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி அபாரமாக பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங்(47) மற்றும் டாம் லேதம்(26) இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வில் யங் அரைசதத்தை தவறவிட்டு பென் ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். லேதமை ஆண்டர்சன் வீழ்த்தினார். அதன்பின்னர் டெவான் கான்வே மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இருவரும் நன்றாகத்தான் ஆடினர்.

ஆனால் ஹென்ரி நிகோல்ஸ் 30 ரன்னிலும், டெவான் கான்வே 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 169 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேரைல் மிட்செலும் டாம் பிளண்டெலும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர்.

2ம் நாளான இன்றைய ஆட்டத்தை டேரைல் மிட்செலும் பிளண்டெலும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்திலும் இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர். சதத்திற்கு பின்னரும் மிட்செல் பெரிய இன்னிங்ஸ் ஆடினார். ஆனால் டாம் பிளண்டெல் சதமடித்த மாத்திரத்தில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

அதன்பின்னர் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால், மழைக்கு பின்னர் ஜாமிசன், சௌதி, மாட் ஹென்ரி ஆகியோர் மளமளவென ஆட்டமிழந்தனர். டேரைல் மிட்செல் இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். ஆனால் கடைசி வீரரான டிரெண்ட் போல்ட் சிறப்பாக ஆடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடினார். அதை பயன்படுத்தி இரட்டை சதத்தை நெருங்கிய டேரைல் மிட்செல் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார். ஆனாலும் அவரது பெரிய இன்னிங்ஸால், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 553 ரன்களை குவித்தது.

2ம் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.

PREV
click me!

Recommended Stories

Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!
SMAT 2025: ஜெய்ஸ்வால் மின்னல் வேக சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரை சதம்.. கம்பீருக்கு ஸ்ட்ராங் மெசேஜ்!