ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்கும் பெங்களூரு மண்ணின் மைந்தன்..?

By karthikeyan VFirst Published Sep 26, 2021, 4:33 PM IST
Highlights

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக பெங்களூரு மண்ணின் மைந்தனும் அந்த அணியின் முன்னாள் வீரருமான கேஎல் ராகுலை நியமிக்கலாம் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் தொடங்கிய 2008லிருந்து ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலி, 2013லிருந்து அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார்.

ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் விராட் கோலி மீது உள்ளது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோஹித் சர்மாவின் கேப்டன்சியுடன் ஒப்பிடப்பட்டு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட கோலி, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுவந்தார்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அவரது பேட்டிங்கும் படுமோசமான சரிவை சந்தித்திருக்கிறது. 2 ஆண்டுகளாக படுமோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்துவரும் கோலி, ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகிறார். 3 விதமான இந்திய அணிகளின் கேப்டன்சி, ஐபிஎல் கேப்டன்சி ஆகிய பணிச்சுமை, சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை, ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை ஆகிய விமர்சனங்கள் அவரது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அடுத்த சீசனில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஆர்சிபி அணி புதிய கேப்டனை தேர்வு செய்து அணியில் எடுக்க இதுவே சரியான தருணம் என்பதால், இந்த சீசனுடன் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கோலி.

ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினாலும், ஐபிஎல்லில் கடைசி வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடப்போவதாகவும் விராட் கோலி தெரிவித்தார்.

கோலி கேப்டன்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்ததையடுத்து, அடுத்த சீசனிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டன்சி பொறுப்பை எடுக்கப்போவது யார் என்ற விவாதம் நடந்துவருகிறது. இதுதொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள டேல் ஸ்டெய்ன், ஆர்சிபி அணி நீண்டகாலத்திற்கான கேப்டனை நியமிப்பதென்றால், கேஎல் ராகுல் தான் அதற்கு சரியான வீரர். பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான ராகுலை, அடுத்த சீசனுக்கான ஏலத்தில் ஆர்சிபி அணி எடுக்கும் என்று எனக்கு தோன்றுகிறது என ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

2013 மற்றும் 2016 ஆகிய ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிய பெங்களூரு மண்ணின் மைந்தனான ராகுல், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இந்நிலையில், கேப்டன்சி அனுபவமும் கொண்ட மண்ணின் மைந்தனான ராகுல் தான் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு தகுதியானவரும் கூட. 
 

click me!