#IPL2021 #CSKvsMI அந்த சீனியர் வீரரா ஆடுறாரா இல்லையானு போட்டிக்கு முன் கடைசி நேரத்தில் தான் சொல்வோம் - சிஎஸ்கே

By karthikeyan VFirst Published Sep 19, 2021, 4:04 PM IST
Highlights

சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான ஃபாஃப் டுப்ளெசிஸ் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடுகிறாரா இல்லையா என்பது போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்புதான் முடிவு செய்யப்படும் என்று சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் நடக்கின்றன. துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் 3 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன.

கடந்த சீசனில், ஐபிஎல்லில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, நடப்பு சீசனின் முதல் பாதியில் அருமையாக ஆடி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே அணியின் வெற்றிகளுக்கு முக்கியமான காரணம், அந்த அணியின் சீனியர் தொடக்க வீரர் ஃபாஃப் டுப்ளெசிஸ். 7 போட்டிகளில் 320 ரன்களை குவித்த டுப்ளெசிஸ், இந்த சீசனின் முதல் பாதியில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் 3ம் இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாதியில் மட்டுமல்லாது, அண்மையில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் அபாரமாக ஆடி ஒரு சதம் உட்பட ஏகப்பட்ட ரன்களை குவித்த டுப்ளெசிஸ், தனது தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை குவித்து கொடுத்தார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி 3 போட்டிகளில் அவரால் ஆடமுடியவில்லை. அவற்றில் 2 போட்டிகள் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி. 

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் கடைசி 3 போட்டிகளில் காயத்தால் ஆடாத டுப்ளெசிஸ், ஐபிஎல்லில் ஆடுவதற்காக அமீரகம் சென்று, அங்கு குவாரண்டினை முடித்துவிட்டு பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

ஆனாலும் அவர் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. நல்ல ஃபார்மில் உள்ள டுப்ளெசிஸின் பேட்டிங், சிஎஸ்கே அணிக்கு அவசியம். இந்நிலையில், டுப்ளெசிஸ் குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், ஃபாஃப் அணியுடன் இணைந்துவிட்டார். குவாரண்டினை முடித்துவிட்டு பயிற்சியிலும் ஈடுபட்டுவருகிறார். ஆனால் அவரது ஃபிட்னெஸ் குறித்தும், அவர் மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுவாரா என்பது குறித்தும் போட்டி தொடங்குவதற்கு முன் கடைசி நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என்றார் விஸ்வநாதன். 
 

click me!