மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல். திருவிழா…. சென்னை – மும்பை மோதும் முதல் போட்டிக்கு எகிறும் எதிர்பார்ப்புகள்..

By manimegalai aFirst Published Sep 19, 2021, 11:26 AM IST
Highlights

கொரோனாவால் தடைபட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று மீண்டும் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன் அணிகள் மோதும் முதல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. கடுமையான பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி ஒரு சில அணிகளின் வீரர்கள், மைதான ஊழியர்கள் என கொரோனா தொற்றியதால் மே மாதம் 3-ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பல ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி முயற்சிகளை மேற்கொண்டார். இந்தநிலையில் எஞ்சியிருக்கும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி முதல் நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

 

முதல் பாதியில் 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. எஞ்சிய 31 ஆட்டங்கள் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளன. தொடரில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ்,  ஆகிய எட்டு அணிகளும் தங்களுக்குள்ளே தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின்  முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

 

இன்று தொடங்கும் முதல் நாள் ஆட்டத்தில் ஐ.பி.எல். போட்டியில் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் பாதியில் 5 வெற்றி, 2 தோல்வி என புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும். இரு அணிகளுக்கும் இடையே ஏற்கெனவே டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 218 ரன்கள் குவித்தும், மும்பையின் ராட்சசன் கிரென் பொல்லார்டின் அதிரடியால் அந்த அணி வெற்றி பெற்றது. முந்தைய தோல்விக்கு பழிதீர்த்து சென்னை அணி வெற்றியுடன் பயனத்தை தொடங்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

click me!