
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. அஷ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.
ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், டிரெண்ட் போல்ட்டை ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. ஃபாஃப் டுப்ளெசிஸை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணியும், விக்கெட் கீப்பர் - டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக்கை ரூ.6.75 கோடிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன.
புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேகேஆர் அணி, ரூ.12.25 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்தது. எனவே அவரைத்தான் கேப்டனாக நியமிக்கும். டேவிட் வார்னரை ரூ.6.25 கோடி என்ற குறைவான தொகைக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்தது. ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் ஆகிய அணிகள் பரபரப்பாக வீரர்களை ஏலத்தில் எடுத்துவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய வலுவான கோர் செட்டப்பை கொண்ட அணிகளும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதை வழக்கமாக கொண்ட சன்ரைசர்ஸ் அணியும் வழக்கம்போலவே பரபரப்பே இல்லாமல் நிதானம் காத்துவருகின்றன.
டுப்ளெசிஸ், வார்னர், டி காக் ஆகிய வீரர்களுக்கு ஆரம்பத்தில் ஆர்வம் காட்டி, பின்னர் எடுக்காத சிஎஸ்கே அணி, இந்த மெகா ஏலத்தில் முதல் வீரராக ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு எடுத்துள்ளது.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஐபிஎல்லில் ஆடிவரும் ராபின் உத்தப்பா, 2021ம் ஆண்டு நடந்த கடைசி ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று ஆடினார். அவரை விடுவித்த சிஎஸ்கே அணி, இந்த ஏலத்தில் அவரை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
உத்தப்பா 193 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 4722 ரன்களை குவித்துள்ள சீனியர் வீரர் ஆவார்.