IPL 2021 சன்ரைசர்ஸை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே..!

By karthikeyan VFirst Published Sep 30, 2021, 11:04 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 135 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து அபார வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 7 பந்தில் வெறும் 2 ரன் மட்டுமே அடித்து ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சனை 11 ரன்னில் வீழ்த்தினார் பிராவோ. வில்லியம்சனை வீழ்த்திய பிராவோ, இளம் வீரர் பிரியம் கர்க்கையும் 7 ரன்னில் வீழ்த்தினார். அருமையாக பந்துவீசிய பிராவோ, ரன்னும் விட்டுக்கொடுக்காமல் விக்கெட்டும் வீழ்த்தினார் பிராவோ.

அதன்பின்னர் இளம் வீரர்கள் அப்துல் சமாத் மற்றும் அபிஷேக் ஷர்மா இணைந்து அருமையாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். அவர்கள் இருவரும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார் ஹேசில்வுட். ஹோல்டரும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் ரஷீத் கான் 2 பவுண்டரிகளுடன் 13 பந்தில் 17 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 134 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் அணி.

135 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய  சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் டுப்ளெசிஸும் இணைந்து வழக்கம்போலவே அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் 38 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு ருதுராஜும் டுப்ளெசிஸும் இணைந்து 75 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் ஜோடி சேர்ந்த மொயின் அலியும் அடித்து ஆடினார். ஆனால் மொயின் அலி 17 ரன்னில் ரஷீத் கானின் பந்தில் துரதிர்ஷ்டவசமாக போல்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து ரெய்னா(2) மற்றும் டுப்ளெசிஸ்(41) ஆகிய இருவரும் ஹோல்டரின் ஒரே ஓவரில்(16வது ஓவர்) ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆனாலும் இலக்கு எளிதானது என்பதால் கடைசி ஓவரில் இலக்கை எட்டி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.
 

click me!